தி.மு.க.வையும், தமிழினத்தையும் யாராலும் வீழ்த்த முடியாது மு.க.ஸ்டாலின் பேச்சு


தி.மு.க.வையும், தமிழினத்தையும் யாராலும் வீழ்த்த முடியாது மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 25 Jan 2022 9:56 PM GMT (Updated: 2022-01-26T03:26:29+05:30)

கருப்பு சிவப்பு ரத்தத்தின் சூடு இருக்கும் வரை தி.மு.க.வையும், தமிழினத்தையும் யாராலும் வீழ்த்த முடியாது என்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

தி.மு.க. மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில், காணொலிக்காட்சி மூலமாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-

“வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’’ என்ற கொள்கை முழக்கத்தோடு தங்களது தேக்குமர தேகத்தை தீந்தமிழுக்காக ஒப்படைத்த தியாகிகள் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்துகிறேன். 1938-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த மொழிப்போராட்டத்தின் வெப்பம்தான் இந்த 2022-ம் ஆண்டு வரைக்கும் தணியாமல் இருக்கிறது. தமிழ், தமிழ் என்று பேசுவதால் அது குறுகிய மனப்பான்மை அல்ல. இந்தி மட்டுமல்ல, எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரிகள் அல்ல. நாம் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தியின் ஆதிக்கத்தைத்தான் எதிர்க்கிறோம்.

இந்தி மொழியை அல்ல, இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். தமிழ் மொழிப்பற்றாளர்களே தவிர, எந்த மொழி மீதான வெறுப்பாளர்களும் அல்ல. ஒருவர் ஒரு மொழியை கற்றுக்கொள்வது என்பது அவர்களது விருப்பம் சார்ந்ததாக இருக்கவேண்டுமே தவிர, வெறுப்பை தூண்டும் வகையில் திணிப்பாக மாறக்கூடாது. ஆனால் இந்தியை திணிக்க நினைப்பவர்கள், அதனை ஆதிக்கத்தின் குறியீடாகவே திணிக்கிறார்கள். ஒரே ஒரு மதம்தான் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப்போல, ஒரே ஒரு மொழிதான் இருக்கவேண்டும். அது இந்தியாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்தியை திணிப்பதன் மூலமாக இந்தி பேசும் மக்களை அனைத்து துறைகளிலும் திணிக்க பார்க்கிறார்கள். இந்தியை திணிப்பதன் மூலமாக மற்ற மொழி பேசும் மக்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்ற நினைக்கிறார்கள். ஒருவனின் தாய்மொழியின் இடத்தை பறித்து, அந்த இடத்தில் இந்தியை உட்கார வைக்கப்பார்க்கிறார்கள். அதனால்தான் இந்தி மொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கிறோம்.

கருப்பு சிவப்பு ரத்தம்

தமிழ் என்றால், தமிழ்நாடு என்றால் அவர்களுக்கு, ஏனோ கசக்கிறது. இந்திய நாட்டுக்கு மிக முக்கியமான இரண்டு நாட்கள் ஒன்று ஆகஸ்டு 15 சுதந்திர நாள். மற்றொன்று ஜனவரி 26 குடியரசு நாள். அந்த குடியரசு நாளில், டெல்லியில் நடைபெறும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு திட்டமிட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. வீரமங்கை வேலுநாச்சியாரை, மானம் காத்த மருது பாண்டியரை, மகாகவி பாரதியாரை, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரை யார் என்று கேட்பதற்கு இவர்கள் யார்? 1938-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்ட காலம் முதல் 2022-ம் ஆண்டு குடியரசு நாள் விழா வரை அவர்களுக்கு தமிழ்நாட்டை புரியவில்லை என்றுதான் சொல்லமுடியும்.

தமிழுக்கு ஒரு ஆபத்து என்றால், தமிழர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் அதற்காக அனைத்து தியாகத்துக்கும் தயாராக இருப்பவர்கள் நாம். அரசியல் இயக்கமாக செயல்படுவதும், தேர்தல் அரசியலில் பங்கெடுப்பதும், இத்தகைய நோக்கங்களுக்காகத்தான். தி.மு.க. ஆட்சியில் இருக்கும் காலம் என்பது அன்னைத்தமிழ் ஆட்சியில் இருக்கும் காலமாக அமையவேண்டும். அனைத்து தமிழர்களும் மேன்மையுறும் காலமாக அமையவேண்டும். எந்த நோக்கத்துக்காக தி.மு.க. உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்திலிருந்து இம்மியளவும் மாறாமல் கழகம் செயல்படும். அனைவருக்குள்ளும் ஓடுவது சிவப்பு ரத்தமாக இருக்கலாம். நமக்குள் ஓடுவது கருப்பு சிவப்பு வகை ரத்தம் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த கருப்பு சிவப்பு ரத்தத்தின் சூடு இருக்கும்வரை இந்த இயக்கத்தையும், தமிழினத்தையும் யாராலும் வீழ்த்த முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story