பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட் 14-ந்தேதி விண்ணில் பாய்கிறது


பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட் 14-ந்தேதி விண்ணில் பாய்கிறது
x
தினத்தந்தி 10 Feb 2022 5:32 AM IST (Updated: 10 Feb 2022 5:32 AM IST)
t-max-icont-min-icon

பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி வருகிற 14-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது.

சென்னை,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இஸ்ரோவின் ராக்கெட் ஏவும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான முதல் ராக்கெட் ஏவுவதற்கான பணியில் இஸ்ரோ தீவிரமாக களம் இறங்கி உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 5:59 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

பூமி கண்காணிப்பு செயற்கைகோள்

இந்த ராக்கெட்டில், 1,710 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.-04 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொறுத்தப்படுகிறது. இது பூமியிலிருந்து 529 கி.மீ. தூரத்தில் சூரிய ஒத்திசைவான துருவ சுற்றுப்பாதையில் சுற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

விவசாயம், வனம் மற்றும் தோட்டங்கள், மண்ணின் ஈரப்பதம் மற்றும் நீரியல் மற்றும் வரைப்படங்கள் போன்ற பயன்பாடுகளுக்கு அனைத்து வானிலை நிலைகளிலும் உயர்தர படங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஈ.ஓ.எஸ்.-04 செயற்கைகோள் ஒரு ரேடார் இமேஜிங் செயற்கைகோளாகும்.

இந்தியா- பூடான் கூட்டு

இந்த ராக்கெட்டில், இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் வளிமண்டல மற்றும் விண்வெளி இயற்பியல் ஆய்வகத்துடன் இணைந்து ஒரு மாணவர் செயற்கைகோளான ‘இன்ஸ்பைர்சாட்-1’ உள்ளடக்கிய 2 சிறிய செயற்கைகோள்களும் பொருத்தப்பட்டு உள்ளன.

கொலராடோ பல்கலைக்கழகம், போல்டர் மற்றும் இஸ்ரோவின் தொழில்நுட்ப விளக்க செயற்கைகோள் ஐ.என்.எஸ். 2டிடி. இது இந்தியா-பூடான் கூட்டு செயற்கைகோளுக்கு (ஐ.என்.எஸ்.-2பி) முன்னோடியாகும்.

25 மணி நேர கவுண்ட்டவுன்

ராக்கெட்டின் இறுதி கட்டப்பணியான கவண்ட்டவுன் 25 மணிநேரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது வருகிற 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 4.29 மணிக்கு தொடங்குகிறது.

இந்த ராக்கெட்டை தொடர்ந்து, இந்தியா மற்றும் பூட்டான் இணைந்து புதிய செயற்கைகோளான பூட்டான்சாட்டுடன் இணைந்து மற்றொரு புவி கண்காணிப்பு செயற்கைகோளான ஈ.ஓ.எஸ்.-06 அல்லது ஓசோன்சாட்-3-ஐ சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தும் பணி தொடரும்.

மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

Next Story