கூட்டுறவு சங்கங்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி தொகையை உடனே வழங்க வேண்டும்


கூட்டுறவு சங்கங்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி தொகையை உடனே வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 8 March 2022 2:51 AM IST (Updated: 8 March 2022 2:51 AM IST)
t-max-icont-min-icon

5 பவுனுக்கு குறைவான நகைக்கடன் தள்ளுபடி தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும், 2021-ல் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின் போதும், 5 பவுன் வரை கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அடமானம் வைத்து வாங்கிய நகைக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அப்போதைய எதிர்கட்சி தலைவராக இருந்த, இப்போதைய முதல்-அமைச்சரும், அவரது மகனும் மேடைதோறும் பேசினார்கள். அவர்களின் பேச்சை நம்பி சுமார் 48 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்களது நகைகளை கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கி உள்ளார்கள்.

ஆனால், இந்த விடியா அரசு, ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடிக்கு புதிய நிபந்தனைகளை விதித்தது. இந்த புதிய நிபந்தனைகளின்படி சுமார் 35 லட்சத்து 38 ஆயிரம் பேர் நகைக்கடன் தள்ளுபடிக்கான தகுதியை பெறவில்லை என்றும், சுமார் 13 லட்சத்து 37 ஆயிரம் பேர் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதி உள்ளவர்கள் என்றும், அவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் ஆணை பிறப்பித்தது.

நிதி இல்லாமல் திண்டாட்டம்

இதனையடுத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான தொகையை இந்த அரசு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், அப்பணத்தை தராமல், அந்தந்த சங்கங்களில் உள்ள வைப்பு நிதியை நகைக்கடன் தள்ளுபடிக்கும், அன்றாட பணிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள அறிவுரை வழங்கியதாக செய்திகள் கூறுகின்றன.

இதனால், தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்கள் உரம், விதை போன்ற விவசாயக்கடன்கள் வழங்குதல், அவசர கால நகைக்கடன் வழங்குதல், முதிர்ச்சியடைந்த வைப்பு நிதிக்கான தொகையை உரியவருக்கு வழங்குதல் போன்ற அன்றாட பணிகளுக்கு கூட போதிய நிதி இல்லாமல் திண்டாடி வருகின்றன.

கோரிக்கைகளை...

நிதி இல்லாததால், வாடிக்கையாளர்களுக்கும், கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கும் தேவையற்ற சச்சரவுகள், வீண் விவாதங்கள் எழுந்தன. கூட்டுறவு கடன் சங்கங்களே இயங்க முடியாத சூழ்நிலை உருவாகியது. எனவே, சங்க அலுவலர்கள் நகைக்கடன் தள்ளுபடிக்கான தொகையை உடனடியாக வழங்கக்கோரி இந்த அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை இந்த அரசு நகைக்கடன் தள்ளுபடிக்கான தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கவில்லை.

5 பவுன் வரையிலான நகை கடன்களை தள்ளுபடி செய்த சுமார் 4 ஆயிரத்து 450 கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, அந்த சங்கங்கள் தள்ளுபடி செய்த தொகையை உடனடியாக வழங்கவும், மேலும் அந்த சங்கங்கள் வைத்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story