பஞ்சு விலையை குறைத்து ஜவுளி தொழிலை காப்பாற்ற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


பஞ்சு விலையை குறைத்து ஜவுளி தொழிலை காப்பாற்ற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 April 2022 2:28 AM IST (Updated: 2 April 2022 2:28 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சு விலையை குறைத்து ஜவுளி தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

ஜவுளித்துறை, பஞ்சு விலை உயர்வால் கடந்த ஓராண்டு காலமாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றது. ஒரு கேண்டி எனப்படும் 356 கிலோ பஞ்சு 2020-21-ம் நிதியாண்டு தொடக்கத்தில் ரூ.38 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அந்த ஆண்டு இறுதியில் ரூ.43 ஆயிரத்துக்கும், 2021-ம் ஆண்டு இறுதியில் ரூ.64 ஆயிரத்துக்கும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.73 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.89 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.

தொழில் முடங்கும் அபாயம்

பஞ்சு விலை உயர்வு மற்றும் ஆடைகள் மீதான பொருட்கள் மற்றும் சேவைகள் வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுவது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி21-12-2021 மத்திய ஜவுளித்துறை மந்திரிக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். இதனையடுத்து, ஆடைகள் மீதான பொருட்கள் மற்றும் சேவைகள் வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அதே சமயத்தில் பஞ்சு விலை உயர்வு தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

கடந்த 60 நாட்களில் மட்டும் பஞ்சு விலை கேண்டி ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில் பஞ்சாலைத் தொழில் கடும் நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விலையேற்றம் காரணமாக மூலதன செலவு இரட்டிப்பாகி உள்ளதாகவும், இது அனைத்து துணிகளின் விலையை உயர்த்த வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது ஒரு புறமிருக்க, மறுபுறம் தரமற்ற பஞ்சு வரத்தால் நூல் உற்பத்தி செலவினம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள ஆலைகள் பல்வேறு வழிகளில் நூல் உற்பத்தியை குறைத்துள்ளதாகவும், நூற்பாலைகள் உற்பத்தியை குறைத்தது காரணமாக தொழிலாளர்கள் பாதிப்படைந்து உள்ளதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி தொழில் முடங்கிவிடும் என்றும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.

வரியை நீக்கினால்...

இந்த அபரிமிதமான விலையேற்றத்திற்கு காரணமாக பதுக்கல் மற்றும் யூக வணிகத்தை குறிப்பிடும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கான 11 சதவீத வரியை நீக்கினால் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும், பஞ்சு விலை குறைப்பு என்பது மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுத்தால்தான் சாத்தியமாகும் என்றும் தெரிவிக்கின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் பஞ்சு விலையைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளன.

எனவே தமிழ்நாட்டின் பிரதான தொழில்களில் ஒன்றான ஜவுளித் தொழிலை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வழிவகுக்கும் வகையில், பஞ்சு விலையை குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story