வன்னியர் இடஒதுக்கீடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்த அன்புமணி தலைமையில் குழு
வன்னியர் இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த சட்டம் இயற்றக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைப்பது என பா.ம.க. அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பா.ம.க. செயற்குழு கூட்டம்
தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இந்த சூழலில் பா.ம.க. அவசர செயற்குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் ராவணன் வடிவேல், பொருளாளர் திலகபாமா, வன்னியர் சங்கத்தலைவர் பு.த.அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.கே.மூர்த்தி, கே.என்.சேகர், வக்கீல் பாலு உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை
வன்னியர் இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்திட கூடுதல் புள்ளி விவரங்களை திரட்டி புதிய சட்டத்தை தமிழக அரசு விரைவில் நிறைவேற்றிட வேண்டும். இதை ஒரு வாரத்திலேயே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துவிட முடியும். இதை அவர் விரைந்து செய்து முடிப்பார் என ஒட்டுமொத்த வன்னியர் சமூகமும் எதிர்பார்த்து கிடக்கிறது.
எடுத்த உடனேயே போராட்டம் என நான் அறிவிக்கப்போவது கிடையாது. ஏனெனில் அந்த தேவை இருக்காது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
சென்னையை நோக்கி வரும் மஞ்சள் படை
நிர்வாகிகள் உண்மையாக உழைத்து பணியாற்றுங்கள். எனக்கு 83 வயது ஆகலாம். ஆனால் ஒவ்வொரு வருடம் கடக்கும்போதும் எனக்கு வயது குறைகிறது என்பதை மறந்துவிட வேண்டாம். நாடாளுமன்ற தேர்தலுக்கு 2½ ஆண்டு இருக்கிறது, சட்டமன்ற தேர்தலுக்கு 4 ஆண்டு இருக்கிறது என்று மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. பிடிக்கவில்லை என்றால் போய்விடலாம். திறமையானவர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள்.
‘எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கி செல்கின்றன’, என்று சொல்வதை போல, சென்னையை நோக்கி 8 திசைகளில் இருந்தும் திரண்டு வரும் மஞ்சள் படையை பார்க்க ஆசைப்படுகிறேன். இளைஞர்கள் மஞ்சள் கொடி ஏந்தி வீறுநடை போடும் அந்த நேரம் நிச்சயம் வரும். உரிய அழைப்பு வரும். காத்திருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
சமூகநீதிக்கான பிரச்சினை
கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ‘வன்னியர் இடஒதுக்கீடு செல்லாது என்பதற்காக சென்னை ஐகோர்ட்டு முன்வைத்த 7 காரணங்களில் 6 காரணங்கள் தவறானவை என்று கூறி அவற்றை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்திருக்கிறது.
புதிய வன்னியர் இடஒதுக்கீடு மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அன்புமணி தலைமையில் 7 பேர் குழு
பா.ம.க. அவசர செயற்குழு கூட்டத்தில், வன்னியர் இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த கூடுதல் புள்ளி விவரங்களை திரட்டி புதிய சட்டத்தை தமிழக அரசு விரைவில் நிறைவேற்றிட வேண்டும் என்றும், இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story