இலங்கை மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்க அனுமதிக்க வேண்டும் -எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


இலங்கை மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்க அனுமதிக்க வேண்டும் -எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 April 2022 4:13 AM IST (Updated: 30 April 2022 4:13 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி பேசினார்.

சென்னை,

இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரி தமிழக சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கடும் நெருக்கடி

பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடிக்கு இலங்கை உள்ளாகி இருக்கிறது. விலைவாசி உயர்ந்திருக்கிறது. நாணயத்தின் மதிப்பு சரிந்திருக்கிறது. அமெரிக்க டாலர்களில் நடக்கும் இறக்குமதிகள் முடங்கியிருக்கின்றன. இறக்குமதியை நம்பியிருக்கும் தொழில் துறைகள் திணறிக் கொண்டிருக்கின்றன.

உலகளாவிய கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் சுற்றுலா, தேயிலை உற்பத்தி மற்றும் ஆடை தயாரிப்பு ஆகிய மூன்றும் முற்றிலுமாக பாதிப்படைந்தது.

பொருளாதார பின்னடைவு

இதனால், இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அன்னிய செலாவணி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், படிப்படியாக பொருளாதார பின்னடைவையும் சந்திக்க தொடங்கியுள்ளது. தொடர்ந்து, இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத்தொட்டு வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால் நாட்டின் 90 சதவீத உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. விறகு அடுப்பினால் சமைக்கும் உணவகங்கள் மட்டுமே செயல்படுகின்றன. அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இறக்குமதியை நம்பியிருப்பதால், அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

மின்தடையால் பாதிப்பு

உதாரணத்துக்கு கோழி தீவனம்கூட அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. பால், சர்க்கரை, முட்டை, பெட்ரோல், டீசல், எரிவாயு என முக்கியமான பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்திருக்கின்றன.

நாட்டின் முக்கியமான மின் உற்பத்தி நிலையங்கள் டீசலில் இயங்கக்கூடியவை என்பதால், அவையும் உற்பத்தியை குறைத்திருக்கின்றன, மூடப்பட்டிருக்கின்றன. இதனால், அங்கு மக்கள் மின்தடையினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல மணி நேரம் மின்வெட்டு

நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் பல மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. வாகனங்கள் இயக்கப்படாததால், அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு இலவச மருத்துவ சேவை வழங்கும் ஆஸ்பத்திரிகளில் திடீர் ஆள் பற்றாக்குறையும், மருந்துகள் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்கிறது.

இலங்கை தமிழர்களும் இதில் வெகுவாக பாதிப்படைந்துள்ளதால், பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து நூற்றுக்கணக்கானோர் அகதிகளாக தமிழகம் நோக்கி வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்கள் தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கச்சத்தீவை மீட்க வழக்கு

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 2008-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் சட்டம் 32-ன்படி கச்சத்தீவை மீட்க வழக்கு தொடர்ந்தார். இதற்கு அப்போதைய மத்திய அரசு கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்று எதிர்மனு தாக்கல் செய்தது.

உடனடியாக ஜெயலலிதா 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந் தேதி இதே சட்டசபையில் வருவாய் துறையை இந்த வழக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினார். அதன் அடிப்படையில் கச்சத்தீவு நமக்கு சொந்தமானது என்பதற்கான 60 பக்க ஆதாரங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது.

மத்திய அரசு உதவி

தற்போது, இலங்கை பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் நிலையில், அந்நாட்டு மக்களைக் காப்பாற்ற மத்திய அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. அவர்களுக்கு தேவையான எரிபொருள், பல்லாயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

கச்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தமாக இருந்தபோது, தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடித்தார்கள். கச்சத்தீவில் தங்களது மீன்பிடி வலையை உலர்த்துவதற்கு, ஓய்வு எடுப்பதற்கு பயன்படுத்தி வந்தனர்.

நடவடிக்கை

இந்த சூழ்நிலையில் நமக்கு சொந்தமான கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விரைந்து நடத்தி, கச்சத்தீவை மீட்டு, தமிழக மீனவர்கள் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை தரவேண்டும் என்ற நமது கோரிக்கையும் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதையும் இந்த அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அ.தி.மு.க. ஆதரவு

இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக, தமிழக அரசின் சார்பில் அத்தியாவசிய உணவு பொருட்களை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு மத்திய அரசு உரிய அனுமதியினை வழங்க வேண்டும். இலங்கையில் வாழும் இந்திய மக்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறோம்.

தமிழக அரசு கொண்டுவந்த இந்த தனித் தீர்மானத்தை அ.தி.மு.க. சார்பில் ஆதரிக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியம் வழங்க ஆலோசனை

முன்னதாக, சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, “இலங்கையில் வாழும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்கனவே ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி கட்டிக்கொடுத்துள்ளார். பல உதவிகளையும் செய்துள்ளார். ஆனால், இங்கு என்னவோ ஒன்றியம் என்ற வார்த்தையில் ஒன்றிப்போய் இருக்கிறீர்கள். இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றும்போது, மத்திய அரசை ஏன் கண்டித்து கருத்து தெரிவிக்கிறீர்கள்” என்று பேசிய அவர், தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கலாம் என்று ஆலோசனை தெரிவித்தார்.

இதே ஆலோசனையை விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களும் வழங்கினார்கள்.

Next Story