அரசு பள்ளியில் மோதல்: மாணவர் பலி... ஆசிரியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை
அரசு பள்ளியில் நடந்த மோதலில் காயமடைந்த பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியை சேர்ந்த விவசாயி முருகன். இவருக்கு செல்வசூரியா (17) என்ற மகனும், ஒரு மகளும் உண்டு.
இவர்கள் இருவரும் பாப்பாக்குடி அருகே பள்ளக்கால் பொதுக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தனர். செல்வசூரியா பிளஸ்-2 படித்தார். கடந்த 26-ந்தேதி பள்ளியில் செல்வசூரியாவுக்கும், 11-ம் வகுப்பு மாணவர்கள் சிலருக்கும் இடையே திடீர் மோதல் உண்டானது.
இதில் எதிர்தரப்பை சேர்ந்த 3 மாணவர்கள் அங்கு கிடந்த கற்களை எடுத்து செல்வசூரியாவை தலையில் பலமாக தாக்கினர். இதில் செல்வசூரியா படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தி, 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே, தாக்குதலில் காயமடைந்த மாணவன் செல்வசூரியா பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து பாப்பாக்குடி போலீசார் கோஷ்டி மோதல் தொடர்பாக ஏற்கனவே 3 மாணவர்கள் மீது பதிவு செய்திருந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்தனர். இந்த நிலையில், செல்வசூரியா கொலை வழக்கில் தொடர்புடைய 3 மாணவர்களையும் உடனடியாக கைது செய்ய அவரது தந்தை முருகன், தாயார் உச்சிமாகாளி மற்றும் உறவினர்கள் பாப்பாக்குடி மெயின் ரோட்டில் திரண்டு மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
இந்த சூழலில், கொலை வழக்கில் தொடர்புடைய 3 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் அம்பை அருகே மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில், அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி சம்பவ நேரத்தில் பணியில் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்காத உடற்கல்வி ஆசிரியர்களான தமிழ்ச்செல்வன், சீபா பாக்கியமேரி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story