விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என மாற்றலாம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 2 May 2022 6:59 AM GMT (Updated: 2022-05-02T12:29:43+05:30)

விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என்று கூட மாற்றலாம் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை, 

அம்மா உணவகத்தை குறைத்து கருணாநிதி உணவகங்கள் அதிகரிக்கும் பணி நடைபெறுகிறது என்றும் விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என மாற்றலாம் என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், “அம்மா உணவகத்தை குறைத்து கருணாநிதி உணவகங்கள் அதிகரிக்கும் பணி நடைபெறுகிறது. பொது மக்களே இதை விரும்ப மாட்டார்கள். கூடிய விரைவில் தமிழ்நாடு கருணாநிதி நாடு என்று கூட மாற்றப்படலாம்.

தமிழக மக்கள் திமுக மீது வெறுப்பில் உள்ளனர். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்னை உள்ளது. மக்கள் கொதித்து போய் உள்ளனர். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை மக்கள் எங்களுக்கு கொடுப்பார்கள். தமிழ் நமது ஆட்சி மொழியாக உள்ளது. ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. திமுக மும்மொழி கொள்கையை நேரடியாக ஆதரிக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை தான்” என்று அவர் கூறினார். 

இதனையடுத்து நடிகை மரணம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “அதிமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில்  மறு விசாரணை நடத்த எந்த பிரச்சினையும் இல்லை. மடியில் கனம் உள்ளவர்களுக்கு தான் பயம் இருக்கும்” என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

Next Story