“இலங்கை மக்களுக்கு நிதியுதவி வழங்கிடுங்கள்” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


“இலங்கை மக்களுக்கு நிதியுதவி வழங்கிடுங்கள்” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 3 May 2022 3:12 PM IST (Updated: 3 May 2022 3:12 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்குமாறு தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு எரிபொருள், மருந்து மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். மேலும் அரசிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

இந்த நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

இதற்கான மத்திய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இந்த சூழ்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக மக்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தமிழக மக்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பெரும் சிரமத்திற்கு மக்களுக்கு, நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. எனவே மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நன்கொடை வழங்க விரும்புவோர் பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் வழங்கலாம்.

மின்னணு பரிவர்த்தனை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர்:-

1.மின்னணு பரிவர்த்தனை: https://ereceipt.tn.gov.in.cmprf/cmprf.html

வங்கி : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
வங்கி கிளை : தலைமைச் செயலக கிளை, சென்னை - 600 009
சேமிப்பு வங்கி கணக்கு எண்: 117201000000070
IFSC குறியீடு : IOBA0001172
CMPRF பான் எண் : AAAGC0038F

மேலும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் நன்கொடை வழங்குவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வழங்கும் நிதியைக் கொண்டு இலங்கை மக்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story