அண்ணா பல்கலைக்கழக சான்றிதழ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


அண்ணா பல்கலைக்கழக சான்றிதழ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 May 2022 4:41 AM IST (Updated: 9 May 2022 4:41 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா பல்கலைக்கழக சான்றிதழ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சொத்து வரி, கல்வி கட்டணம், மதுவிலக்கு, நீட் தேர்வு, நகைக்கடன், பயிர்களுக்கான இழப்பீடு, உரத் தட்டுப்பாடு, மின்சார கட்டணம் குறித்து நீட்டி முழக்கிய தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டதோடு மட்டும் அல்லாமல், அதற்கு நேர்மாறான பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு வேளை இதுதான் தி.மு.க. அரசின் சாதனை போலும்.

சென்ற ஆண்டு இடமாற்று சான்றிதழுக்கான கட்டணம், உண்மை தன்மை சரிபார்ப்பு சான்றிதழுக்கான கட்டணம் ஆகியவற்றின் மீதும், மதிப்பெண் பட்டியல், தற்காலிக பட்டச்சான்றிதழ், பட்டச்சான்றிதழ் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்வதற்கான கட்டணங்கள் மீதும் தொலைந்துபோன சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கான கட்டணத்தின் மீதும், விடைத்தாளின் நகலினை பெறுவதற்கான கட்டணத்தின் மீதும் 18 சதவீதம் பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை அண்ணா பல்கலைக்கழகம் விதித்தது.

மறுபரிசீலனை

தற்போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கான பல்வேறு சான்றிதழ் கட்டணங்களை உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

எனவே இதில் முதல்-அமைச்சர் உடனடியாக தலையிட்டு சான்றிதழ்களுக்கான கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பிற பல்கலைக்கழகங்களும் இதுபோன்ற கட்டண உயர்வு அறிவிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story