தமிழக அரசு வழங்கிய நிவாரணப்பொருட்களுடன் இலங்கை செல்லும் கப்பல்


தமிழக அரசு வழங்கிய நிவாரணப்பொருட்களுடன் இலங்கை செல்லும் கப்பல்
x
தினத்தந்தி 18 May 2022 5:53 AM IST (Updated: 18 May 2022 5:53 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு வழங்கி உள்ள நிவாரணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு புறப்படும் ‘டான் பின்-99’ என்ற கப்பலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைக்கிறார்.

தமிழக அரசு நிவாரணம்

பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.80 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர், ரூ.28 கோடியில் 137 வகையான உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டின்பேரில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த பொருட்களை இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக ‘டான் பின்-99’ என்ற கப்பல் சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த கப்பலில் கடந்த 2 நாட்களாக மருந்து பொருட்கள், பால் பவுடர்கள், நிவாரண பொருட்கள் கிரைன் உதவியுடன் கப்பலில் ஏற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

700 அட்டை பெட்டிகளில் மருந்து

மருந்து பொருட்களை பொருத்தவரையில் முதல் கட்டமாக ரூ.8 கோடியே 87 லட்சத்து 9 ஆயிரத்து 593 மதிப்பில் 55 வகையான அத்தியாவசிய மருந்துகளும், 2 சிறப்பு மருந்துகளும் 700 அட்டை பெட்டிகள் கப்பலில் ஏற்றப்பட்டு உள்ளது. அதேபோல் 15 கிலோ எடை கொண்ட பால் பவுடர்கள் சுமார் 200 டன் வரை ஏற்றப்பட்டு உள்ளது.

அதேபோல் 50 கிலோ எடையுள்ள அரிசி பைகள் 5 ஆயிரம் டன் அளவுக்கு ஏற்றப்பட்டு உள்ளது. தொடர்ந்து நிவாரணப்பொருட்கள் ஏற்றும் பணி நடந்து வருகிறது. கப்பலில் இருக்கும் இடத்தை பொறுத்து நிவாரணப்பொருட்கள் ஏற்றப்படுகிறது.

முதல்-அமைச்சர் கொடியசைக்கிறார்

கப்பலில் நிவாரணப்பொருட்கள் ஏற்றும் பணி இன்று (புதன்கிழமை) பகல் நிறைவடைந்ததும், மாலை 5 மணிக்கு சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கை கொழும்பு துறைமுகத்திற்கு ‘டான் பின்-99’ கப்பல் புறப்படுகிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைக்கிறார். இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.

சென்னை துறைமுகத்தில் கப்பல் தொடர்பான ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறை பணிகளை நிறைவு செய்துவிட்டு, சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்படும் கப்பல், அடுத்த 44 மணி நேரத்தில் கொழும்பு துறைமுகத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட தகவல்களை துறைமுக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story