முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு; 2 ஆயிரத்து 507 மாணவர்கள் எழுதினர்


முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு; 2 ஆயிரத்து 507 மாணவர்கள் எழுதினர்
x

திண்டுக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் நடைபெற்ற முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 2 ஆயிரத்து 507 மாணவர்கள் எழுதினர்.

திண்டுக்கல்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் உயர்கல்வி பெறுவதற்கு நான் முதல்வன் திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் மற்றொரு அம்சமாக மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு வசதியாக, உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த உதவித்தொகைக்கு மாநிலம் முழுவதும் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் 1,000 பேர் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

இதற்காக நேற்று பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பிளஸ்-1 முதல் இளநிலை பட்டப்படிப்பு வரை ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. இந்த திறனாய்வு தேர்வுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 697 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.

இதையடுத்து மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வசதியாக திண்டுக்கல்லில் 6 தேர்வு மையங்களும், பழனியில் 5 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டன. காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை முதல் தாளுக்கான தேர்வும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இரண்டாம் தாளுக்கான தேர்வும் நடத்தப்படுகிறது.

இதில் 2 ஆயிரத்து 507 மாணவ-மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர். மேலும் 190 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர்.


Next Story