251 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கூடலூர் பகுதியில் ஸ்கூட்டர், ஜீப்பில் கடத்திய 251 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கூடலூர், கம்பம் உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்லும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை சிலர் கடத்தி செல்வதாக உத்தமபாளையம் பறக்கும் படை துணை தாசில்தார் முத்துக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும்படையினர் நேற்று கூடலூர்- குமுளி தேசிய நெடுஞ்சாலை லோயர்கேம்ப் பஸ்நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் மூட்டைகளுடன் வந்த ஒருவர் அதிகாரிகளை பார்த்ததும் ஸ்கூட்டருடன், மூட்டைகளையும் விட்டு விட்டு தப்பியோடினார். உடனே பறக்கும்படையினர் அந்த மூட்டைகளையும், ஸ்கூட்டரையும் கைப்பற்றினர். அதில் 5 மூட்டைகளில் 200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் உத்தமபாளையத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். தப்பியோடியவர் யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் லோயர்கேம்ப் பென்னிகுயிக் மணிமண்டபம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநிலம் குமுளி நோக்கி சென்ற ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 21 மூட்டைகளில் 51 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீப் டிரைவர் கூடலூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த ஜெயபாண்டி (32) என்பவரை கைது செய்தனர்.