ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் 26-ம் தேதி உள்ளூர் விடுமுறை


ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் 26-ம் தேதி உள்ளூர் விடுமுறை
x
தினத்தந்தி 19 Dec 2023 5:37 AM GMT (Updated: 19 Dec 2023 5:41 AM GMT)

ராமநாதபுரம் சமஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் மரகத நடராஜர் சன்னதி அமைந்துள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் கோவில். இந்த கோவில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமையான கோவிலாகும். ராமநாதபுரம் சமஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் மரகத நடராஜர் சன்னதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் உள்ள மரகத நடராஜர் சன்னதியானது ஆருத்ரா திருவிழா அன்று ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும்.

இந்த நிலையில் இந்த வருடம் ஆருத்ரா திருவிழா வரும் 26-ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவிற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவர். எனவே வரும் 26-ம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வரும் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் "உள்ளூர் விடுமுறை" ஆகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு ஜன.6 ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜனவரி 6ம் தேதி அன்று வழக்கம்போல் இயங்கும். இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், டிச.26ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story