கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கம்

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது என்று போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் கோபால் தெரிவித்து உள்ளார்.
கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது என்று போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் கோபால் தெரிவித்து உள்ளார்.
தீபத் திருவிழா
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம் மற்றும் தற்காலிக சிறப்பு பஸ்கள் நிறுத்தம் குறித்து போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் கோபால் திருவண்ணாமலைக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தற்காலிக பஸ் நிலையம் அமைய உள்ள திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் உள்ள மார்க்கெட் கமிட்டி வளாகத்திலும், திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள நகராட்சி பள்ளி எதிரில் உள்ள மைதானத்தையும் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 6-ந் தேதி மகாதீபம் ஏற்றப்படுவதையொட்டி தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து மகா தீபத்தை காணவரும் பக்தர்களின் வசதிக்காக வருகிற 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை 3 நாட்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மற்றும் இதர போக்குவரத்து கழகம் சார்பாக 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள 13 தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து 6,500 நடைகள் சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, சேலம், காஞ்சீபுரம், வேலூர், திருவள்ளூர், ஈரோடு, கோவை, கடலூர், நாகப்பட்டினம், கும்பகோணம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும்.
சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ள நிலையில் பயணிகளுக்கு கூடுதல் வசதியாக கழிவறை வசதி, குடிநீர் வசதிகள், மின்சார பல்புகள் அமைப்பதுடன் பயணிகளின் வசதிக்காக பஸ்கள் இயக்கம் குறித்த தகவல்களை அறிய 9445456040, 9445456043 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
64.26 சதவீதமாக உயர்ந்துள்ளது
அதைத் தொடர்ந்து அவர் திருவண்ணாமலை அரசு போக்குவரத்து கழக பணி மனையில் ஆய்வு மேற்கொண்டு பஸ்கள் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா, வருகை பதிவேடு, பள்ளி, கல்லூரி நேரங்களில் பஸ்கள் சரியான நேரத்தில் இயக்கப்படுகிறதா, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டு பயணம் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி செல்லவும் அதிகப்படியான பயணிகள் பயணிக்கும் வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்கவும் போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மகளிர் கட்டணமில்லா பஸ் பயணத்திட்ட செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இதுவரை மகளிர் பயணிகளின் எண்ணிக்கை தொடக்கத்தில் நாளொன்றுக்கு 34 லட்சத்து 61 ஆயிரமாக இருந்தது. தற்போது 44 லட்சத்து 38 ஆயிரமாக உயர்ந்து, சாதாரண நகர பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை 64.26 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார்.
ஆய்வின் போது கலெக்டர் முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (விழுப்புரம்) மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ், திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் முருகேசன் மற்றும் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.






