மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,707 கன அடியாக அதிகரிப்பு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,707 கன அடியாக அதிகரிப்பு
x

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,707 கன அடியாக அதிகரித்துள்ளது.

சேலம்,

தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். ஆனால் நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தீவிரம் அடையவில்லை.

இதனால் கர்நாடக அணைகளில் இருந்து வழக்கமாக தமிழகத்திற்கு சுப்ரீம் கோா்ட்டு தீர்ப்பின்படி காவிரி ஆற்றில் திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரை கூட கர்நாடக அரசு திறந்து விடவில்லை. பெயரளவில் அவ்வப்போது மழையளவை பொறுத்து அம்மாநில அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு வருகிறது.

இதனிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. நேற்று காலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 507 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் 2,707 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இருந்தாலும் அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 44.06 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலையில் 43.11 அடியாக சரிந்தது. இன்று நீர்மட்டம் மேலும் குறைந்து 42.49 அடியானது. தற்போது அணையில் 13.40 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.


Next Story