"நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி.." நம்பியவர்கள் தலையில் மிளகாய் அரைத்து மோசடி!


நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி.. நம்பியவர்கள் தலையில் மிளகாய் அரைத்து மோசடி!
x

சேலம் அருகே நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 2.83 கோடி மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்:


சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் பொன்னுசாமி. இவருடைய மகன் அரவிந்த்குமார் (வயது 30). இவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

அந்த மனுவில், சசிகுமார் என்பவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று அறிமுகமானார். மேலும் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறினார். இதை நம்பி நான் உள்பட பலர் சேர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு பல தவணைகளில் ரூ.2 கோடியே 83 லட்சத்தை சசிகுமாரிடம் கொடுத்தோம்.

ஆனால் அவர் அரசு வேலை வாங்கி தரவில்லை. பின்னர் அவர் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று தெரிந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இதே போன்று பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகுமார் தற்போது சென்னை புழல் சிறையில் உள்ளார். இதையடுத்து ரூ.2¾ கோடி மோசடி வழக்கில் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் கூறும் போது, 'சசிகுமார் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறி பலரிடம் மோசடி செய்து உள்ளார். எனவே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் தான் மேலும் யார், யாரிடம் மோசடி செய்து உள்ளார், மோசடி செய்த பணத்தை என்ன செய்தார், அதை எவ்வாறு மீட்பது என்பது தெரிய வரும்' என்றார்.


Next Story