2 - ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வரும் 10- ம் தேதி, முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்


2 - ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வரும் 10- ம் தேதி,   முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 8 Nov 2023 4:19 AM GMT (Updated: 8 Nov 2023 4:43 AM GMT)

தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு ரூ.1,000 வழங்கப்பட்டது.

இதற்கிடையே, இந்ததிட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அத்துடன், விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இதுவரை 11.85 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இதையடுத்து மேல்முறையீடு மற்றும் புதிதாக விண்ணப்பித்துள்ள 11.85 லட்சம் மகளிரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. மேலும் தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி வருவதால் முன்கூட்டியே உரிமைத் தொகையை விடுவிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் 2ம் கட்டத்தை நவ.10ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடல் நிலை சரியானதும் முதல்-அமைச்சர் பங்கேற்கும் முதல் அரசு விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story