செங்கல்பட்டு அருகே டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது - கொள்ளையடிப்பதற்காக டிரைவரை கொன்று காரை கடத்தியதாக வாக்குமூலம்


செங்கல்பட்டு அருகே டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது - கொள்ளையடிப்பதற்காக டிரைவரை கொன்று காரை கடத்தியதாக வாக்குமூலம்
x

செங்கல்பட்டு அருகே டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிப்பதற்காக டிரைவரை கொன்று காரை கடத்தியது அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் தெரியவந்தது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் அடுத்த அரசன்கழனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் (வயது 30). கால் டாக்சி டிரைவர். பா.ம.க. ஒன்றிய இளைஞர் அணி செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு தாம்பரம் அடுத்த மெப்ஸ் பகுதியில் இருந்து செங்கல்பட்டு வரை வாடிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு சென்ற கார் டிரைவர் அர்ஜுன் மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு செங்கல்பட்டை அடுத்த வல்லம் பஸ் நிலையம் அருகே பிணமாக வீசப்பட்டார்.

அவரது உடலை கைப்பற்றிய செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் இருந்த அவரது உடலை வாங்க மறுத்து அர்ஜுனின் உறவினர்கள் மற்றும் கால் டாக்சி டிரைவர்கள் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கார் நிறுவனத்தில் பதிவு செய்த செல்போன் எண்ணை வைத்து இந்த கொலையில் தொடர்புடையதாக பெரம்பலூர் மாவட்டம் கரியனூர் பகுதி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரசாந்த் (26), திருமூர்த்தி (22) கட்டிமுத்து (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

பிரசாந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தவர். அங்கு சரிவர ஊதியம் கிடைக்காததால் சென்னை கோயம்பேட்டில் உள்ள பலாப்பழ கடையில் வேலை பார்த்து வந்தார். அங்கு திருமூர்த்தி (22), கட்டிமுத்து (25) ஆகியோருடன் சேர்ந்து விழுப்புரம் அருகே உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க திட்டம் தீட்டி உள்ளார்‌.

அதன்படி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்செல்ல கார் தேவைபட்டதால் முதலில் காரை திருட திட்டமிட்டு கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் மெப்ஸ் வரை காரை பதிவு செய்து காரில் ஏறியுள்ளனர். அந்த காரில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருந்ததால் காரின் வேகம் குறைவாக இருந்தது. அதனால் தாம்பரம் மெப்ஸ்ஸில் இறங்கிய அவர்கள் வேறு ஒரு காரை பதிவு செய்துள்ளனர்.

அப்போது அவர்களை ஏற்றி செல்ல அர்ஜுன் வந்தார். அந்த காரில் ஏறிய அவர்கள் செங்கல்பட்டு வந்ததும் அர்ஜுனை காரை விட்டு இறங்கி ஓடுமாறு கூறியுள்ளனர். அதில் அர்ஜுனுக்கும் காரில் வந்த நபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அர்ஜுனின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

அந்த காரும் வேகம் குறைவாகவே இயங்கியதால் அந்த காரை மேல்மருவத்தூர் அருகே நிறுத்தி விட்டு பஸ்சில் ஏறி 5 பேரும் தப்பிச்சென்றுள்ளனர். 3 பேர் கைதான நிலையில் தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

படுகொலை செய்யப்பட்ட அர்ஜுன் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்கக்கோரியும், கால்டாக்சி டிரைவர்களுக்கு பாதுகாப்பு கேட்டும், இந்த கொலை வழக்கில் உரிய விசாரனை நடத்தக்கோரியும் கால்டாக்சி டிரைவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கோஷங்கள் எழுப்பியபடி செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்றனர். அப்போது அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பில் இருந்த போலீசார் கலெக்டர் அலுவலக முன் வாசலிலேயே அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட கால் டாக்சி டிரைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ம.க. தலைவர் ஜாசுவா, புனித தோமையர் மலை பா.ம.க. ஒன்றிய செயலாளர் மணிவண்ணன், பகுதி செயலாளர் வேதநாராயணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சங்கர் மற்றும் பலர் கலெக்டர் ராகுல்நாத்தை சந்தித்து மனு அளித்தனர்.

முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில வன்னியர் சங்க தலைவருமான திருக்கச்சூர். ஆறுமுகம் அர்ஜுனின் உடல் வைக்கப்பட்டிருந்த செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.


Next Story