மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 3 விமானங்கள் இன்று ரத்து.!
மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 3 விமானங்கள் இன்று ரத்துசெய்யப்பட்டுள்ளது.
மதுரை,
தென் மாவட்டங்களில் முக்கிய விமான நிலையமாக திகழக்கூடிய மதுரை விமான நிலையத்திற்கு நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவைகளும், இலங்கை, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாட்டு விமான சேவைகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 5, இரவு 8.15 மற்றும் இரவு 9 மணிக்கு சென்னை செல்லக்கூடிய 3 விமானங்கள் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மதுரையில், இருந்து கொழும்பு, ஐதராபாத் செல்லும் விமானங்களும் 5 மணி நேரம் தாமதமாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக்கோளாறு காரணமாக விமான சேவை ரத்துசெய்யப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளது பயணிகளிடையே சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.