தமிழகத்தில் இருந்து 3 கவர்னர்களை நியமித்துபெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி
3 கவர்னர்ளை நியமித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி என்று திருப்பூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெருமிதத்துடன் கூறினார்.
ஜார்கண்ட் மாநில கவர்னர்
கோவை முன்னாள் எம்.பி.யும், பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவருமான திருப்பூர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். கவர்னராக பொறுப்பேற்ற பின்னர் சொந்த ஊரான திருப்பூருக்கு வந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், திருப்பூர் ஆயத்த ஆடை சார்ந்த தொழில் அமைப்புகள், அனைத்து ரோட்டரி சங்கங்கள், அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவரும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவருமான சக்திவேல் தலைமை தாங்கினார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் வரவேற்றார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., சைமா தலைவர் வைகிங் ஈஸ்வரன், நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி, டாக்டர் முருகநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
விழாவில் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
திருப்பூர் மாநகரில் மட்டும்தான் தொழிலாளர்களின் உரிமையும், தொழிலின் பாதுகாப்பும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்று உள்ளது. எனவேதான் திருப்பூர் மகத்தான வெற்றியை பெற்று வருகிறது. மெட்ரோ ரெயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள். அது நிச்சயமாக வரும். அதை வரவைப்பதுதான் எங்களது பணியாக இருக்கும். பிரீ டிரேடு அக்ரிமெண்ட் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே நிச்சயமாக பிரீ டிரேடு அக்ரிமெண்ட் ஐரோப்பிய யூனியனுடன் வந்தே தீரும்.
எந்த பிரதமருக்கும் ஒரே மாநிலத்திற்கு 3 கவர்னர்களை தருவது என்பது சாத்தியமல்ல. இந்திய வரலாற்றில் தமிழகத்தை சேர்ந்த 3 கவர்னர்கள் 4 மாநிலங்களை கவனிக்கும் பொறுப்பை வழங்கிய பெருமையை பிரதமர் நரேந்திர மோடி தந்திருக்கிறார். குறிப்பாக அந்த பெருமை திருப்பூருக்கும் கிடைத்துள்ளது. எந்த உயர்நிலைக்கு சென்றாலும் என்றும் உங்களில் ஒருவனாக வீற்றிருப்பேன். உங்களின் குரலாக ஒலிப்பேன். எங்கே சென்றாலும் திருப்பூர் மண்ணின் பெருமையை பறைசாற்றுவேன். இவ்வாறு அவர் பேசினார்.