கடலூர் அருகே லாரி மீது கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போ் பலி


கடலூர் அருகே  லாரி மீது கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போ் பலி
x

லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் சண்முகம் மகன் ராகவன். இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சைபர்கிரைம் பிரிவு போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி பாண்டிஸ்வரி. இவர்களுடைய மகள் அட்சயா. இந்த நிலையில், ராகவன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களான மதுரையை சேர்ந்த காா்த்திகேயன் மகன் சரவணன், கோபால் மகன் ராஜேஷ் ஆகியோருடன் சென்னையில் இருந்து நேற்று காலை தனது சொந்த ஊரான மதுரை நோக்கி காரில் புறப்பட்டார். காரை சரவணன் ஓட்டிச்சென்றார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கழுதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக கார் பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் காரில் பயணித்த ராகவன், சரவணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பாண்டிஸ்வரி, அட்சயா, ராஜேஷ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திட்டக்குடி போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக இறந்தார். பாண்டிஸ்வரி மற்றும் அட்சயா ஆகிய இருவரும் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story