குடிபோதையில் காப்பர் காயில் திருட்டு.. மறந்து போய் திருடிய இடத்திலேயே விற்க வந்து சிக்கினர்


குடிபோதையில் காப்பர் காயில் திருட்டு.. மறந்து போய் திருடிய இடத்திலேயே விற்க வந்து சிக்கினர்
x
தினத்தந்தி 3 Aug 2022 3:30 AM GMT (Updated: 3 Aug 2022 3:31 AM GMT)

பெரம்பலூரில் தாமிர கம்பிச்சுருள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த கம்பிச்சுருளை திருடிய பட்டறையிலேயே விற்க வந்தபோது அவர்கள் சிக்கினர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் கலை நகரை சேர்ந்த திருமலையின் மகன் பிரதாப் (வயது 29). இவர் பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் பொக்லைன் எந்திரங்கள் சரிபார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் கடந்த 26-ந்தேதி ரூ.5 ஆயிரம் மதிப்பிலான 2 தாமிர கம்பிச்சுருள் (காப்பர் காயில்) திருட்டு போனது.

இந்த நிலையில் நேற்று காலை ஒருவர் 2 தாமிர கம்பிச்சுருளை பிரதாப் பட்டறைக்கு விற்க வந்துள்ளார். அவற்றை பிரதாப் வாங்கி பார்த்தபோது, அதில் தனது பட்டறை பெயர் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும் தனது பட்டறையில் திருட்டு போன தாமிர கம்பிச்சுருளை, மீண்டும் தன்னிடமே விற்க வந்ததால், அவற்றை அந்த நபர்தான் திருடிச்சென்றிருப்பார் என்று அவரையும், அவருடன் சரக்கு வாகனத்தில் வந்திருந்த 2 பேரையும் சக பட்டறை உரிமையாளர்கள், லாரி டிரைவர்கள் உதவியுடன் பிடித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா, வாழவச்சனூர் மாணிக்க கவுண்டர் தெருவை சேர்ந்த மோகன கிருஷ்ணன்(36), பெருங்களத்தூர் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த அருணாச்சலத்தின் மகன் மணிகண்டன்(26), கீழ்பெண்ணாத்தூர் தாலுகா, தண்டரை பள்ளி மேட்டு தெருவை சேர்ந்த பிரபு(36) என்பது தெரியவந்தது.

அவர்கள் குடிபோதையில் தாமிர கம்பிச்சுருள்களை திருடிச்சென்றதாகவும், இதனால் எந்த பட்டறையில் திருடியது என்பது தெரியாமல், அதே பட்டறையில் தாமிர கம்பிச்சுருள்களை விற்க வந்ததும், தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் வந்த சரக்கு வாகனத்தில் சென்னையில் உள்ள ஒரு ஆசிரமத்தின் பெயர் மற்றும் முகவரி எழுதப்பட்டிருந்தது. அந்த ஆசிரமத்தில் தங்கியிருப்பவர்களுக்கு பொதுமக்களிடம் இருந்து பழைய ஆடைகளை பெற்றுச்செல்வதற்காக அந்த வாகனம் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் அவர்கள் பழைய ஆடைகளை வாங்குவது போன்று திருட்டில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளில் உதிரிபாகங்கள், டீசல் திருடும் கும்பல் அவர்கள்தான் என்று லாரி உரிமையாளர்கள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story