பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை


பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
x

பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக பெண் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

பொன்னேரி அடுத்த மணலி புதுநகர் பகுதியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் பள்ளி கட்டிடம் கட்ட வாங்கிய நிலத்திற்கு சிட்டா, அடங்கல் மற்றும் பட்டா பெயர் மாற்றம் செய்து தரக்கோரி ஸ்ரீதர் என்பவர் பொன்னேரி சின்னக்காவனம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பணியில் இருந்த வி.ஏ.ஓ. மல்லிகாவிடம் இதுகுறித்து ஸ்ரீதர் விண்ணப்பம் அளித்தார். வி.ஏ.ஓ. மல்லிகா, ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் சிட்டா அடங்கல் மற்றும் பட்டா பெயர் மாற்றம் வழங்குவேன் என கூறினார்.

லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ஸ்ரீதர் இதுகுறித்து சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சிறப்பு புலனாய்வு குழு பிரிவில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீதரிடம் ரசாயண பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

பொன்னேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு சென்ற ஸ்ரீதர் அங்கு பணியிலிருந்த வி.ஏ.ஓ மல்லிகாவிடம் ரூ.3 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் மல்லிகாவை கையும் களவுமாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதைத்தொடர்ந்து வி.ஏ.ஓ மல்லிகா பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இந்த வழக்கு திருவள்ளூர் முதன்மை நீதிமன்றம் மற்றும் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று விசாரணை முடிவில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் வி.ஏ.ஓ மல்லிகாவுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


Next Story