தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களை ஒழிக்கக்கோரி 30-ந்தேதி பா.ம.க. போராட்டம்


தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களை ஒழிக்கக்கோரி 30-ந்தேதி பா.ம.க. போராட்டம்
x

கோப்புப்படம் 

போதைப்பொருட்களை ஒழிக்கக்கோரி தமிழகம் முழுவதும் 30-ந்தேதி பா.ம.க. போராட்டம் நடத்த உள்ளது.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப் பொருள் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. போதைக் கலாச்சாரத்தால் மிகப்பெரிய பேரழிவை நோக்கி தமிழ்நாடு பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மேற்கொள்ளாதது ஏமாற்றமளிக்கிறது.

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனப்பகுதிகளில் தான் போதைப்பொருள் அதிகம் விற்பனையாகிறது. வெளிமாநில மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் அதிக எண்ணிக்கையில் படிக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், தனியார் கல்லூரிகளும் தான் போதைப்பொருட்கள் தடையின்றி பயன்படுத்தப்படும் பகுதிகளாக திகழ்கின்றன. படிப்புக்காக வீடுகளை விட்டு வந்து விடுதிகளிலும், தனியாக அறை எடுத்தும் தங்கியுள்ள இளைஞர்கள் எளிதாக போதைப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.

அண்மைக்காலமாக கொடிய போதைப் பொருட்கள் மாத்திரைகள் வடிவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சட்டவிரோதமாக விற்கப்படுகின்றன. போதைக்கு அடிமையாகும் மாணவர்களும், இளைஞர்களும் மிகக்குறைந்த வயதிலேயே தங்களின் வாழ்வை முடித்துக் கொள்கின்றனர். காவல்துறையினர் நினைத்தால், போதைப் பொருட்களின் விற்பனையை அடியோடு ஒழித்து விட முடியும். தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நமது விலை மதிப்பற்ற செல்வங்களான இளைய தலைமுறையினரை சீரழித்து விடும். அத்தகைய சீரழிவை தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு.

தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வரும் 30-ந் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. சென்னையில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை ஏற்பார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story