சென்னை பிரியாணி கடையில் 3½ டன் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்


சென்னை பிரியாணி கடையில் 3½ டன் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
x

சென்னை பிரியாணி கடையில் 3½ டன் கெட்டுப்போன இறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்னையில் உள்ள ஒரு பிரபல பிரியாணி நிறுவனத்திடம் 3½ டன் ஆடு மற்றும் கோழி இறைச்சியை ஆர்டர் செய்து இருந்தனர். அந்த பிரியாணி நிறுவனம், 3½ டன் இறைச்சியை வழங்கும்படி ஆன்-லைனில் உணவு வழங்கும் நிறுவனத்திடம் ஆர்டரை ஒப்படைத்தது. அதன்படி அந்த ஆன்-லைன் உணவு நிறுவனம் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து 3½ டன் ஆடு மற்றும் கோழி இறைச்சியை பதப்படுத்தப்பட்ட லாரியில் திருமண வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

ஆனால் திருமண விழாவில் சமையல் செய்ய பயன்படுத்தியபோது அந்த இறைச்சி கெட்டுப்போனதால் துர்நாற்றம் வீசியது. உடனே கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தாமல் சென்னையில் உள்ள பிரியாணி நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பினர்.

இதுபற்றி அந்த பிரியாணி நிறுவனம் சென்னை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் சதீஷ் தலைமையில் உணவு துறை அதிகாரிகள் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள பிரியாணி நிறுவன சமையல் கூடத்துக்கு சென்று கெட்டுப்போன 3½ டன் இறைச்சியை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆன்-லைன் உணவு நிறுவனத்திடம் விளக்கம் கேட்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது.


Next Story