தமிழகத்தில் 3,422 கண்மாய்கள் முற்றிலும் வறண்டுவிட்டன


தமிழகத்தில் 3,422 கண்மாய்கள் முற்றிலும் வறண்டுவிட்டன
x

தமிழகத்தில் 3,422 கண்மாய்கள் முற்றிலும் வறண்டுவிட்டன என்றும், 469 கண்மாய்களில் மட்டுமே முழுமையாக நீர் இருப்பு உள்ளதாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விருதுநகர்

தமிழகத்தில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் விவசாய பாசன வசதிக்கு கண்மாய்கள் பெருமளவில் உதவுகின்றன, கடந்த காலங்களில் கண்மாய்கள் ஐரோப்பிய யூனியன் நிதி உதவி மூலம் தொடர்ந்து மராமத்து செய்யப்பட்டு வந்தது.ஆனால் ஐரோப்பிய யூனியன் நிதி உதவி நிறுத்தப்பட்ட நிலையில் கண்மாய்களை மராமத்து செய்ய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாத நிலையில் குடி மராமத்து முறையில் 10 சதவீத கண்மாய்கள்தான் பராமரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கண்மாய்கள் மற்றும் வரத்து கால்வாய்களில் கருவேலமர ஆக்கிரமிப்புகள் மற்றும் தனியார் ஆக்கிரமிப்புகளால் கண்மாய்களில் போதிய நீரை தேக்கி வைக்க முடியாத நிலையும் உள்ளது.மாநிலம் முழுவதும் 14,314 கன்மாய்கள் உள்ள நிலையில் 469 கண்மாய்கள் மட்டுமே முழுமையாக நீர் நிரம்பியுள்ளது. 3,422 கண்மாய்கள் அதாவது 24 சதவீத கண்மாய்கள் முற்றிலுமாக வறண்டு கிடக்கின்றன.

இதற்கு தென்மேற்கு பருவ மழை குறைவு காரணமாக சொல்லப்பட்டாலும், கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்பும், தூர்வாரப்படாததுமே பிரதான காரணம் என நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகிறார்கள்.வடகிழக்கு பருவமழை காலத்தில் கண்மாய்கள் நிரம்புவதற்கு வாய்ப்புள்ளதாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே தமிழக அரசு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு அனைத்து மாவட்டங்களிலும் கண்மாய்கள் மற்றும் வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story