கடலில் குளிப்பவர்களை தடுக்க சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் 4 நவீன போலீஸ் பூத்துகள் - மெரினா கடற்கரை பகுதியில் புதிதாக அமைப்பு


கடலில் குளிப்பவர்களை தடுக்க சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் 4 நவீன போலீஸ் பூத்துகள் - மெரினா கடற்கரை பகுதியில் புதிதாக அமைப்பு
x

கடலில் குளிப்பவர்களை தடுக்க சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் 4 நவீன போலீஸ் பூத்துகள் மெரினா கடற்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் 4 நவீன போலீஸ் பூத்துகள் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த போலீஸ் பூத்துகள், இரவில் வண்ண ஒளி வெள்ளத்தில் காட்சி அளிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடலில் குளிக்கும் ஆசையில், அலைகளில் சிக்கி இளைஞர்கள் உயிரை விடும் சம்பவங்களை தடுக்கும் வகையில் இந்த போலீஸ் பூத்துகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு போலீசார் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டே இருப்பார்கள். கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என்ற போலீசாரின் வேண்டுகோள் அதில் ஒலிக்கும். புகார் கொடுக்க போலீஸ் நிலையத்துக்கு அலைய வேண்டியதில்லை. போலீஸ் பூத்துகளில் ஏதாவது ஒன்றில் புகார் கொடுக்கலாம். போலீசார் உடனடி நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

தகவல்களை பரிமாறி கொள்ள 'வாட்ஸ்-அப்'குழு ஒன்றும் போலீசார் மத்தியில் தொடங்கப்பட்டுள்ளது. கூட்ட நேரத்தில் காணாமல் போகும் குழந்தைகளை தேடி கண்டுபிடிக்கும் பணியிலும் ஈடுபடுகிறார்கள். நேற்று முன்தினம் ஞாயிறு அன்று காணாமல் போன 3 குழந்தைகள் இந்த போலீஸ் பூத்துகள் வாயிலாக கண்டுபிடித்து மீட்கப்பட்டனர்.

கடலோர காவல் குழுமத்தினரும் போலீசாருடன் அங்கு காவல் பணியில் ஈடுபடுவார்கள். மெரினாவில் இரவில் நடக்கும் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கமும் இதில் அடங்கி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், உதவி கமிஷனர் பாஸ்கர் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் இந்த போலீஸ் பூத்துகள் செயல்படுகிறது.


Next Story