இன்னும் 4 நாட்கள் உழைப்பு... நாற்பதையும் வென்று கொடுக்கும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்


இன்னும் 4 நாட்கள் உழைப்பு... நாற்பதையும் வென்று கொடுக்கும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
x

நரேந்திர மோடிதான் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கவிருக்கிறார் என்பது எப்போதோ உறுதியாகிவிட்டது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சற்றேறக்குறைய ஒரு மாதத்திற்கு முன் தொடங்கிய மக்களவைத் தேர்தல் திருவிழா, இப்போது அதன் நிறைவுகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 19-ம் நாள் வாக்குப்பதிவு நாள். ஆம்.... தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கப்படுவதற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் களத்தில் நீ உழைத்துக் கொண்டிருப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்... பல நேரங்களில் வியந்து கொண்டிருக்கிறேன்.

அறிவியலின் அடிப்படைத் தத்துவத்தின் மீதே ஐயத்தை ஏற்படுத்தும் ஒரு வினா என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. எந்திரங்களுக்குக் கூட ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. பேருந்துகளோ, மகிழுந்துகளோ, தொடர்வண்டிகளோ ஒய்வின்றி தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருப்பதில்லை. ஆனால், பாட்டாளி இளஞ்சிங்கங்களாகிய நீங்கள் மட்டும் எந்த அறிவியல் தத்துவத்திற்கும் ஆட்படாமல் ஓடிக் கொண்டிருக்கிறீர்களே... அது எப்படி? என்பது தான் என் மனதில் எழும் வினா.

வியப்பைத் தரும் உன் உழைப்பு தான் எனக்கு மகிழ்ச்சியையும் அளிக்கிறது; பெரும் நம்பிக்கையையும் தருகிறது. உனது உழைப்பு தான் தமிழ்நாட்டில் நடைபெறும் மக்களவைத் தேர்தல்களில் நமக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித்தரப் போகிறது. தேசிய அளவில் நரேந்திர மோடிதான் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கவிருக்கிறார் என்பது எப்போதோ உறுதியாகிவிட்டது. தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைக் கைப்பற்றப்போவதும் சுவர் மீது எழுத்தாகிவிட்டது.

இதற்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு என்ன? பாட்டாளி மக்கள் கட்சியின் பங்களிப்பு என்ன? என்பது தான் விடை காணப்பட வேண்டிய வினா ஆகும். என்னைப் பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் களமிறங்கியுள்ள 10 பேர் உட்பட தமிழ்நாடு மற்றும் புதுவையிலிருந்து 40 பேரும் மக்களவைக்கு செல்ல வேண்டும்; நமது மாநிலங்களின் உரிமைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமும், எதிர்பார்ப்பும். அதை நீ நிறைவேற்றுவாய் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.

2024 மக்களவைத் தேர்தல் குறித்த நமது கனவு நனவாக வேண்டும் என்றால், அதற்கு உன் உழைப்பு இன்னும் நான்கு நாட்களுக்குத் தொடர வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து கடுமையாக உழைத்து முன்னணியில் இருக்கிறோமே, என்ற எண்ணம் உனக்கு வரக்கூடாது. அதிக நம்பிக்கை அலட்சியமாக மாறிவிடக்கூடாது.

பயிரை சாகுபடி செய்யும் காலத்தை விட அறுவடை செய்யும் காலத்தில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதன்படி அடுத்த 4 நாட்களுக்கு பாட்டாளி இளஞ்சிங்கங்களாகிய நீங்கள் மிகவும் விழிப்புடனும், கடமை உணர்வுடனும் தேர்தல் பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடிவாரியாக அமைக்கப்பட்டுள்ள குழுக்களைச் சேர்ந்தவர்கள் அடுத்து வரும் நாட்களில் ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தது 10 முறையாவது சந்தித்து அந்தந்த மக்களவை தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டும். வெற்றியை நமக்கு உரித்தாக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story