திருவள்ளூரில் ரூ.451 கோடியில் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி - அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆவடி சா.மு. நாசர் திறந்து வைத்தனர்


திருவள்ளூரில் ரூ.451 கோடியில் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி - அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆவடி சா.மு. நாசர் திறந்து வைத்தனர்
x

திருவள்ளூரில் ரூ.451 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆவடி சா.மு. நாசர் திறந்து வைத்தனர்.

திருவள்ளூர்

ரூ.451 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அமைப்பாளர்களாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் கலந்துகொண்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியை ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் தொடங்கி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் கனவான மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்பதை நினைவாக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசியுடன் இங்கு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு முதலில் கல்லூரி வளாகத்திற்கு ரூ. 143 கோடியும், ஆஸ்பத்திரி வளாகத்திற்கு ரூ. 165 கோடியும், தங்கும் விடுதி கட்டுவதற்கு ரூ. 77 கோடியும் அடுத்து சிறப்பு பணிக்கான கூடுதலாக ரூ. 17 கோடியும், ஆஸ்பத்திரிக்கு தேவையான மருத்துவ உபகரணங்களுக்காக ரூ. 48 கோடியே 45 லட்சம் என மொத்தம் ரூ.451 கோடியே 16 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த அரசு ஆஸ்பத்திரி கல்லூரி வளாகம் 21.48 ஏக்கர் பரப்பளவில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் பெருந்திட்ட வளாகத்தில் மிக பிரமமாண்டமான கட்டிடங்கள் முடிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி தேதி பிரதமர் நரேந்திர மோடியால் முதலமைச்சர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. தேசிய மருத்துவ ஆணையம் கல்லூரிக்கு 2021-2022 -ம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்பிற்கு 100 மாணவர்களுக்கு அனுமதி வழங்கியது அதனையொட்டி 100 மருத்துவ மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

புதிதாக திறக்கப்பட்ட இந்த ஆஸ்பத்திரியில் பொது மருத்துவ பிரிவு, பொது அறுவை சிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மயக்கவியல் துறை, பல் நளவியல் துறை, எலும்பியல் மற்றும் முட நீக்கியல் துறை, கண் மருத்துவத்துறை, காது, மூக்கு, தொண்டை, மருத்துவத்துறை, தோல் மருத்துவத்துறை, நெஞ்சக மற்றும் காச நோய் மருத்துவதுறை, குருதி வங்கி, தீக்காயங்கள் சிகிச்சை அளிக்கும் பிரிவு, மனநல மருத்துவத்துறை, மேம்படுத்தப்பட்ட மத்திய ஆய்வகம், கதிரியக்கவியல் துறை, இயன்முறை சிகிச்சை பிரிவு, திரவ நச்சு நீக்கியல் பிரிவு மற்றும் 10 அறுவை சிகிச்சை அரங்கமும், 98 படுகை வசதிகளுடன், 6 தீவிர அதிதீவிர, உயர் சார்பு தீவிர சிகிச்சை பிரிவு உள்ளது.

இதில் அனைத்து விதமான உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கும் எந்திரங்களும் உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் மேல் சிகிச்சைக்காக இனி திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சென்னைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார், எம்.எல்.ஏ.க்.கள் வி.ஜி. ராஜேந்திரன், சந்திரன், கிருஷ்ணசாமி, சுதர்சனம், கணபதி, துரை சந்திரசேகர், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் டாக்டர் அரசஸ்ரீவத்ஷன், திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் உதய மலர் பொன்.பாண்டியன், நகர் மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story