வழிப்பறி திருட்டில் ஈடுபட முயன்ற 5 பேர் கைது; வாலாஜாபாத் போலீசார் நடவடிக்கை
வாலாஜாபாத் வழிப்பறி திருட்டில் ஈடுபட முயன்ற 5 வாலிபர்களையும் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
வாலாஜாபாத் காஞ்சீபுரம் செல்லும் சாலையில் உள்ள தாங்கி கூட்டு சாலை சரஸ்வதி கோவில் பின்புறம் சந்தேகத்திற்கிடமான வகையில் 5 இளைஞர்கள் திரிவதாக வாலாஜாபாத் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகத்திற்கு இடமான வகையில், கையில் உருட்டு கட்டைகள் வைத்துக் கொண்டு அந்த வழியாக செல்பவர்களை மடக்கி பிடித்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட தயாராக இருந்ததை கண்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து தாங்கி கிராமத்தைச் சேர்ந்த தமிழன் (வயது 20), ஏகனாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகன் (20), விஜய் (24), கருக்கு பேட்டையைச் சார்ந்த ஆனந்தராஜ் (20), வாலாஜாபாத் இந்திரா நகரை சேர்ந்த அருண் (25) ஆகிய 5 வாலிபர்களையும் மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த உருட்டு கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.