புஞ்சைபுளியம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


புஞ்சைபுளியம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x

புஞ்சைபுளியம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி அவ்வையார் வீதியை சேர்ந்தவர் ஜோகரா பேபி (வயது 70). இவருடைய மகன் சுல்தான். இவர் கோவையில் வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகராபேபி கோவையில் உள்ள சுல்தான் வீட்டுக்கு சென்றார்.

அதன்பின்னர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்ைத காணவில்லை.

யாரோ மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று நள்ளிரவு கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து இருக்கிறார்கள். பின்னர் பீரோவையும் உடைத்து பணத்தை திருடிச்சென்றது தெரிந்தது.

இதுகுறித்து உடனே புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்த்தார்கள். கைரேகை நிபுணர்கள் வந்து பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தார்கள். மேலும் ஈரோட்டில் இருந்து மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோகரா பேபி வீட்டில் பணம் திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

புஞ்சை புளியம்பட்டியில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.


Next Story