திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 5,052 பேர் எழுதினர் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 5,052 பேர் எழுதினர் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்
x
தினத்தந்தி 8 Oct 2023 8:22 AM GMT (Updated: 8 Oct 2023 11:29 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 5,052 பேர் எழுதினர் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

திருவள்ளூர்

அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு, மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வு தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உதவித்தொகையாக மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

அதேபோன்று உயர்கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு 2023- 24 நடப்பு கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு மாநில பாடத்திட்டத்தின் கீழ் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்தநிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து கொள்குறி வகையில் இரு தேர்வுகள் காலை, மாலை என இருவேளையும் நடந்தது. திருத்தணி கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலை, ஆர்.கே.பேட்டை அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த தேர்வினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி ஆய்வு செய்து தெரிவித்ததாவது:-

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 19 மையங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு 5,479 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 5,052 மாணவர்கள் தேர்வு எழுதினர். மீதமுள்ள 427 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் உடனிருந்தார்.


Next Story