6 பேர் விடுதலை விவகாரம்: மத்திய அரசின் சீராய்வு மனுவுக்கு எதிராக வாதிடுவோம் - சீமான்


6 பேர் விடுதலை விவகாரம்: மத்திய அரசின் சீராய்வு மனுவுக்கு எதிராக வாதிடுவோம் - சீமான்
x

6 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை எதிர்த்து வாதிடுவோம் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வ.உ.சிதம்பரனார் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

6 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை எதிர்த்து வாதிடுவோம். மத்திய அரசின் மனு அவசியமற்றது. எளிதாக இந்த விடுதலை தீர்ப்பு கிடைக்கவில்லை. நீண்ட நாள் போராட்டம் இது. இதை சட்டப்பூர்வமாக அணுகாமல் மானுடப்பற்று, கருணையின் அடிப்படையில் அணுக வேண்டும்.

இந்த விவகாரத்தில் எனக்கு இருக்கும் வலியும் காயமும் அண்ணாமலைக்கு இருக்க வாய்ப்பு இல்லை. அது அவர்களின் கட்சி கோட்பாடு. விடுதலை செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது. அவர்கள் விரும்பும் நாட்டுக்குச் செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

திமுகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நடப்பது பங்காளி சண்டை. இதற்காக பாரதிய ஜனதாவை எப்படி உள்ளே விட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story