நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் - நீச்சல் குளத்திற்கு சீல் வைப்பு


நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் - நீச்சல் குளத்திற்கு சீல் வைப்பு
x

நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் முறையான பாதுகாப்புகள் இன்றி இயங்கியதாக நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள நீலமங்கலம் பாரதியார் தெரு ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவருடைய மனைவி தாரிகா (35), இவர்களுடைய மகன்கள் சஸ்வின் வைபவ் (வயது 6), சித்விக் வைபவ் (2). நேற்று முன்தினம் தாரிகா தனது மகன்களை அதே பகுதியில் உள்ள தனியார் நீச்சல் குளத்திற்கு நீச்சல் பயிற்சியில் ஈடுபட அழைத்து சென்றார். பின்னர் அங்கு இருந்து தனது இளைய மகனுக்கு உணவு கொடுப்பதற்காக தாரிகா சென்றார்.

திரும்பி வந்து பார்த்தபோது சஸ்வின் வைபவ்வை காணவில்லை. அங்கும் இங்கும் தன்னுடைய மகனை தேடி உள்ளார். அப்போது நீச்சல் குளத்தில் தன்னுடைய மகன் மூழ்கி கிடப்பதை பார்த்த தாரிகா அலறி துடித்தார். நீச்சல் குளத்தில் மூழ்கிய சிறுவனை பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கண்காணிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சிறுவனை மீட்டு காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மணிமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் முறையான பாதுகாப்புகள் இன்றி இயங்கியதாக நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குன்றத்தூர் தாசில்தார் மற்றும் கிராம அலுவலர் தலைமையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டது.



Next Story