கொரட்டூர் அருகே 3 பேரை கொலை செய்ய ஆயுதங்களுடன் பதுங்கிய 7 பேர் கைது - திராவகம் நிரப்பிய பாட்டில்கள் பறிமுதல்


கொரட்டூர் அருகே 3 பேரை கொலை செய்ய ஆயுதங்களுடன் பதுங்கிய 7 பேர் கைது - திராவகம் நிரப்பிய பாட்டில்கள் பறிமுதல்
x

3 பேரை கொலை செய்யும் திட்டத்துடன் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். திராவகம் நிரப்பிய பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை கொரட்டூரை அடுத்த மாதனாங்குப்பம் பஜனை கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக கொரட்டூர் போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குறிப்பிட்ட வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர்.

போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். வீட்டில் இருந்த 7 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 8 அரிவாள் மற்றும் கத்திகள், திராவகம் நிரம்பிய பாட்டில்கள், 2 கிலோ கஞ்சா மற்றும் அவர்கள் வைத்திருந்த 5 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

விசாரணையில் அவர்கள், ஆவடியை சேர்ந்த பிரகாஷ்(வயது 26), பாலகிருஷ்ணன் (29), கல்பாளையத்தை சேர்ந்த மற்றொரு பிரகாஷ் (26), புத்தகரம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (20), வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ராபர்ட் (19), பெரம்பூரை சேர்ந்த ஈசாக் (22), திருமுல்லைவாயலை சேர்ந்த கிருஷ்ணகுமார் (19) என்பது தெரிந்தது. 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

கைதான பிரகாஷ், தற்போது ஆவடியில் வசித்து வருகிறார். இதற்கு முன்பு பெரம்பூரில் வசித்து வந்தார். அவர் மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இதனால் அவருக்கு அப்பகுதியில் எதிரிகளால் ஆபத்து என்பதை அறிந்து ஆவடிக்கு குடியேறிவிட்டதாக தெரிகிறது.

இந்தநிலையில் பிரகாஷ், தனது கூட்டாளி பாலகிருஷ்ணனுடன் நேற்று முன்தினம் மாலை பெரம்பூர் சென்றார். இதையறிந்த பெரம்பூரைச் சேர்ந்த சீனா, கண்ணன், தினேஷ் உள்ளிட்ட 10 பேர் கும்பல் பிரகாஷ், பாலகிருஷ்ணன் இருவரையும் சரமாரியாக தாக்கினர்.

அவர்களிடம் இருந்து தப்பிய பிரகாஷ், பாலகிருஷ்ணன் இருவரும் தங்களது நண்பர்களான மற்றவர்களை கொரட்டூர் வரவழைத்து தங்களை தாக்கிய சீனா, கண்ணன், தினேஷ் ஆகிய 3 பேரையும் கொலை செய்ய திட்டம் தீட்டி இதற்காக பயங்கர ஆயுதங்களுடன் வீட்டில் பதுங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் கைதான 7 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். தக்க சமயத்தில் போலீசார் பயங்கர ஆயுதங்களுடன் 7 பேரையும் கைது செய்து விட்டதால் 3 கொலைகள் தவிர்க்கப்பட்டு உள்ளதுடன், 3 பேரின் உயிரை போலீசார் காப்பாற்றி உள்ளனர். இதற்காக கொரட்டூர் போலீசாரை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.


Next Story