மருத்துவ சிகிச்சை பெற அசாமில் இருந்து வருபவர்களுக்கு வேலூரில் 7 மாடியில் தங்கும் விடுதி


மருத்துவ சிகிச்சை பெற அசாமில் இருந்து வருபவர்களுக்கு வேலூரில் 7 மாடியில் தங்கும் விடுதி
x

மருத்துவ சிகிச்சை பெற அசாமில் இருந்து வருபவர்களின் வசதிக்காக வேலூரில் 7 மாடியில் கட்டப்பட்டு உள்ள தங்கும் விடுதியை அசாம் முதல்-மந்திரி ஹேமந்த பிஸ்வா சர்மா திறந்து வைத்தார்.

வேலூர்,

வேலூர் சத்துவாச்சாரி 2-வது மண்டல அலுவலகம் அருகே அசாம் மாநில அரசின் சார்பில் அசாம் பவன் என்ற 7 அடுக்குமாடி கட்டிடம் ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவில் அசாம் மாநில முதல்-மந்திரி ஹேமந்த பிஸ்வா சர்மா கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில் வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன், நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத், அசாம் மாநில பொது நிர்வாக மந்திரி ரஞ்சித்குமார்தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் முதல்-மந்திரி ஹேமந்த பிஸ்வா சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 40 ஆண்டுகளாக வேலூருக்கு சிகிச்சைக்காக வரும் அசாம் மாநில மக்கள் வேறு இடங்களில் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களின் நலனுக்காக இங்கு இந்த பவன் கட்டப்பட்டுள்ளது. அசாமில் சிகிச்சை வசதிகள் உள்ள போதிலும் புற்றுநோய் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு சிலர் வேலூருக்கு வருகின்றனர்.

மாணவர்களுக்காகவும்..

மேலும் வி.ஐ.டி.யிலும் அசாம் மாநில மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதேபோன்று நாட்டில் 10 தலைநகரங்களில் பவன் கட்டப்பட்டுள்ளது. வேலூர் மாநிலத்தின் தலைநகரம் இல்லாவிட்டாலும் சி.எம்.சி. மருத்துவமனை, வி.ஐ.டி. உள்ளதால் இங்கு அசாம் மக்களின் வருகை அதிகமாக உள்ளது. எனவே அங்கு கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று பிற மாநிலங்களில் பவன் கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பெங்களூருவிலும் கட்டப்பட்டுள்ள கட்டிடம் பிப்ரவரியில் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story