தாறுமாறாக ஓடிய கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து - போலீஸ் ஏட்டு உள்பட 7 பேர் காயம்


தாறுமாறாக ஓடிய கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து - போலீஸ் ஏட்டு உள்பட 7 பேர் காயம்
x

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தாறுமாறாக ஓடிய கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் போலீஸ் ஏட்டு உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.

சென்னை

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் தேரடி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை திருவள்ளூர் அடுத்த எறையூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சத்யா (வயது 21) ஓட்டிச் சென்றார். ஆட்டோவில் திருவள்ளூர் அடுத்த சித்தம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஜான்சி ராணி (40), சித்தம்பாக்கத்தை சேர்ந்த நான்சி ( 32), மேன்சி (4), யாபேஸ் (3), கிதியோன்(1) ஆகியோர் இருந்தனர்.

திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று ஆட்டோ மீது மோதியது. இதில் அந்த ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோவில் பயணம் செய்த டிரைவர் சத்யா உள்பட 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் அந்த காரின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த திருவள்ளூர் அடுத்த ஆவடி போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரியும் திருவள்ளூர் அடுத்த பாண்டூர் கிராமத்தை சேர்ந்த அப்பன் செல்வன் (46) என்பவர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story