திருத்தணி அருகே மின்சாரம் தாக்கி 7-ம் வகுப்பு மாணவன் பலி


திருத்தணி அருகே மின்சாரம் தாக்கி 7-ம் வகுப்பு மாணவன் பலி
x

திருத்தணி அருகே மின்சாரம் தாக்கி 7-ம் வகுப்பு மாணவன் பலியானார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரி-ஜமுனா தம்பதியினர். இவருடைய மகன் திருமூர்த்தி (வயது 12). திருமூர்த்தியின் பெற்றோர் அரி, ஜமுனா இருவரும் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், திருத்தணி வாட்டர் டேங்க் பகுதியில் உள்ள தனது பாட்டி சரோஜம்மா வீட்டில் தங்கி திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் பள்ளிக்கு சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள தந்தை வழி பாட்டி கன்னியம்மாள் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார்.

நேற்று காலை வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டிருந்த திருமூர்த்தி அங்கிருந்த மின்சார வயரை எதிர்பாராமல் மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட திருமூர்த்தி தலையில் பலத்த காயமடைந்தார். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story