வணிக நிறுவனம் நடத்தி ரூ.8 கோடி மோசடி; பெண் கைது


வணிக நிறுவனம் நடத்தி ரூ.8 கோடி மோசடி; பெண் கைது
x

வணிக நிறுவனம் நடத்தி ரூ.8 கோடி மோசடி செய்த வழக்கில் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெரம்பலூர்

வணிக நிறுவனம்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அணைப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களிடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கிவரும் ஜே.என்.ஆர். வணிக நிறுவனத்தினர் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும், லாபத்தில் 10 சதவீதம் மாதாமாதம் பங்குத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிப்பு செய்தனர்.

இதனை நம்பிய அணைப்பாடி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகன் தனவேல் உள்ளிட்ட பலர் அந்த நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். ஆனால் தனவேல் உள்பட முதலீடு செய்தவர்களுக்கு அவ்வாறு லாபத்தொகை ஏதும் வழங்கப்படவில்லை.

கைது

இதனால் பாதிக்கப்பட்ட தனவேல் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வணிக நிறுவனத்தில் பணிபுரிந்த நிர்வாகிகள் கன்னியாகுமரி மாவட்டம் கடியாப்பட்டினத்தை சேர்ந்த ஸ்டனிஸ்லாஸ் என்பவரது மகன் ஜெயபால், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகா, விஷ்ணுபுரம், எரச்சகுளம் பகுதியை சேர்ந்த மதன் என்பவரது மனைவி ராதிகா (வயது 28) மற்றும் அதேபகுதியை சேர்ந்த தர்மராஜ் ஆகிய 3 பேர் மீதும் ரூ.8 கோடியே ஒரு லட்சம் மோசடி செய்ததாக இந்திய தண்டணை சட்டம் 147 மற்றும் 420 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயலெட்சுமி தலைமையிலான போலீசார் கன்னியாகுமரிக்கு சென்று ராதிகாவை கைது செய்து பெரம்பலூர் அழைத்து வந்தனர். பின்னர் அவர் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story