பழனி முருகன் கோவிலில் 9 நாட்கள் தங்கரத புறப்பாடு நிறுத்தம்
பழனி முருகன் கோவிலில் வருகிற 15-ந்தேதி முதல் 9 நாட்கள் தங்கரத புறப்பாடு நடைபெறாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 15-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. இதேபோல் பெரியநாயகி அம்மன் கோவிலிலும் நவராத்திரி விழாவையொட்டி 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது. மேலும் கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 23-ந்தேதி விஜயதசமியன்று அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தநிலையில் நவராத்திரி விழாவையொட்டி வருகிற 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 9 நாட்கள் பழனி மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என்றும், 24-ந்தேதி முதல் வழக்கம்போல் தங்கரத புறப்பாடு நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.