விவசாயிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்த விவசாயிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரியலூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மின் இணைப்பு
அரியலூர் மாவட்டம் செந்துறை தோப்பேரியை சேர்ந்தவர் செல்வதுரை(வயது 45). விவசாயி. தமிழக அரசு கடந்த 2020-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தில் பயன்பெற தனது விவசாய நிலத்திற்கு மனைவி ஜெயந்தி பெயரில் 7.5 எச்.பி. விவசாய மின் இணைப்பு கோரி தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் தட்கல் முறையில் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் செலுத்தி விண்ணப்பித்திருந்தார். 2021-ம் ஆண்டில் மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவுபடி அரியலூர் மாவட்டத்தில் செந்துறை உட்பிரிவில் விண்ணப்பித்திருந்த 40 பேரில் இவரது பெயர் 20-வது இடத்தில் இருந்தது. மற்றவர்களுக்கு மின் இணைப்பு கொடுத்து விட்டநிலையில், இவருக்கு மட்டும் கொடுக்கப்படவில்லை என தெரிகிறது.
ரூ.1 லட்சம் இழப்பீடு...
தற்சமயம் ஜெயந்தி இறந்துவிட்டார். இதையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் செல்வதுரை அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இதுகுறித்து வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் பாலு மற்றும் லாவண்யா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பில், தமிழ்நாடு மின்சார வாரியம் செல்வதுரைக்கு அவர் கோரிய மின் இணைப்பை ஒரு மாதத்திற்குள் தர வேண்டும் என்றும், மன உளைச்சல், பொருட் செலவு மற்றும் வீண் அலைச்சல் ஆகியவற்றுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் மற்றும் அபராதமாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நுகர்வோர் நலநிதிக்கு உத்தரவிட்டனர். மேலும் வழக்கு செலவு தொகையாக ரூ.5 ஆயிரம் செல்வதுரைக்கு தர வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.