தீபாவளி சீட்டு பிடிப்பதாக கூறி ரூ.1 கோடி பணத்துடன் தலைமறைவாகிய தம்பதி
தீபாவளி சீட்டு பிடிப்பதாக கூறி, ரூ.1 கோடி வரை மோசடி செய்து, பணத்துடன் தலைமறைவான போலீஸ் தம்பதி வீட்டை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
மதுரை,
மதுரை அருகே தீபாவளி சீட்டு பிடிப்பதாக கூறி, ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்து, பணத்துடன் தலைமறைவான போலீஸ் தம்பதி வீட்டை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பரவையை அடுத்த சங்கன்கோட்டை தெருவை சேர்ந்தவர்கள் மோகன்குமார் - கஸ்தூரி தம்பதி. மோகன்குமார் மதுரை குற்றப்பிரிவு போலீசில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகின்றார். இவர், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம், தீபாவளி சீட்டு பணம் பிடிப்பதாக கூறி, சுமார் 600 பெண்களிடம், தலா ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளார்.
தீபாவளிக்கு பணத்தை வட்டியுடன் திருப்பி தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். தீபாவளி நெருங்கும் நிலையில், முதலீட்டாளர்கள் பணத்தை கேட்டபோது, பணம் தராமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. பொதுமக்கள் நெருக்கடி கொடுத்த போது, கஸ்தூரி - மோகன்குமார் தம்பதி, பணத்துடன் வீட்டை பூட்டிவிட்டு மாயமாகிவிட்டனர்.
இது குறித்து, எஸ்பி மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள், போலீஸ் தம்பதி வீட்டை முற்றுகையிட்டனர்.