ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கண்டமங்கலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் குளிர் சாதன உள்பகுதியில் வைக்கப்படும் குளிர் காக்கும் பெட்டி தயாரிப்பு பணி நடந்து வருகிறது. .இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நிறுவனத்தின் ஒரு பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மளமளவென பரவி நிறுவனம் முழுவதும் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, பேரம்பாக்கம், ஒரகடம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 6-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை 3 மணி நேரம் போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் ஆனதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.