பட்டாசு ஆலையில் தீ விபத்து; 11 பேர் உடல் கருகி பலி


பட்டாசு ஆலையில் தீ விபத்து; 11 பேர் உடல் கருகி பலி
x

அரியலூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பலியாகினர். இதில் தீக்காயம் அடைந்த 12 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரியலூர்

தொடரும் சம்பவங்கள்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பட்டாசு விற்பனையும் சூடுபிடித்துள்ள நிலையில், சில இடங்களில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்தும் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டநிலையில், பட்டாசு குடோன்களிலும் வெடி விபத்து ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடியில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த 7-ந் தேதி தமிழக, கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசுக் கடைக்கு கன்டெய்னர் லாரியில் இருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். அந்த சோகம் மறைவதற்குள் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்த விவரம் பின்வருமாறு:-

பட்டாசு ஆலை

அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திருமானூர் அருகே உள்ள வெற்றியூர் ஊராட்சி விரகாலூர் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக யாழ் அன்ட் கோ என்ற பெயரில் நாட்டுவெடி தயாரிப்பு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையை ராஜேந்திரனின் மருமகன் அருண்குமார் (வயது 35) என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த ஆலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி நாட்டு வெடிகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்றது.

இதில் சிவகாசி மற்றும் விருதுநகரில் இருந்து 10 தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு பேன்சி பட்டாசுகளும் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் நேற்று காலை ஆலையில் பட்டாசுகள் தயாரிப்பு பணியில் 2 பெண்கள் உள்பட சுமார் 35 பேர் ஈடுபட்டு இருந்தனர். இதில் பலர் காலை 8.30 மணி அளவில் அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்று விட்டனர்.

வெடித்து சிதறிய பட்டாசுகள்

மீதம் இருந்தவர்கள் நேற்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஓட்டலுக்கு சென்றவர்கள் அங்கு சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது அப்பகுதியில் இருந்து பயங்கரமாக வெடிவெடிக்கும் சத்தம் கேட்டது. தொடர்ந்து ஆலையில் தயாரித்து வைத்திருந்த வெடிகள் நாலாபுறமும் வெடித்து சிதறின.

விபத்தை உணர்ந்த தொழிலாளர்கள் ஆலையை நோக்கி ஓடி வந்து பார்த்தபோது, ஆலை கட்டிடம் இடிந்து தரைமட்டமாது, வெடிகள் வெடித்துக்கொண்டு இருந்தன. தொடர்ந்து அதன் அருகே இருந்த 5 கட்டிடங்களில் வைக்கப்பட்டு இருந்த வெடி பொருட்களும் தீப்பிடித்து வெடித்து சிதற ஆரம்பித்தன.

10 பேர் உடல் சிதறி பலி

இந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விபத்து நடந்த இடத்தை நோக்கி ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அணைக்க முடியவில்லை. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர், பெரம்பலூர், வேப்பூர், செந்துறை, திருவையாறு உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் உள்ள தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆலைக்குள் இருந்த வெடிகள் வெடித்து சிதறி கொண்டே இருந்ததால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். மேலும் வாகனங்களில் கொண்டுவந்த தண்ணீர் பற்றாத நிலையில் தனியார் குடிநீர் லாரிகள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்க முயன்றனர். பல மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீயை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள், ஆலை வளாகத்துக்குள் சென்று பார்த்தபோது 2 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகி கிடந்தனர். அவர்களது கை, கால், தலை, உடல் பகுதி என அனைத்தும் நாலாபுறமும் கிடந்தன.

9 பேர் அடையாளம் தெரிந்தது

இந்த விபத்தில் இறந்த அரியலூர் மாவட்டம் விரகாலூர் அறிஞர் அண்ணா காலனியைச் சேர்ந்த ரவி (45), இவரது மனைவி சிவகாமி (42), சப்பாணி மனைவி வெண்ணிலா (43), கிருஷ்ணன் மனைவி ராசாத்தி (45), பிள்ளையார்பட்டியை சேர்ந்த சிவகுமார், கும்பகோணம் அருகே உள்ள மணப்படையூரைச் சேர்ந்த ஆனந்தராஜ் (50), விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த சீனு என்கிற லியாகத் மைதீன், விருதுநகர் மாவட்டம் கோபாலபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள குமுளூரை சேர்ந்த அறிவழகன் ஆகிய 9 பேர் அடையாளம் தெரிந்தது.

இறந்தவர்களில் ஒருவரின் உடல் முற்றிலும் சிதைந்து கருகிய நிலையில் அவர் யார் என்பது கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது.

தீவிர சிகிச்சை

இதில் 13 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். காயம் அடைந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சுகள் மூலம் அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

தொடா்ந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல் பாகங்களை மருத்துவ குழுவினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்டனர். சிதறிய உடல் பாகங்கள் அனைத்தையும் போர்வைகளில் சேகரித்து ஆம்புலன்சுகளில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சம்பவ இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர்கள்

இந்த சம்பவத்தை அறிந்த அமைச்சர்கள் சிவசங்கர், சி.வி.கணேசன், எம்.எல்.ஏ. கு.சின்னப்பா, அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி. பகலவன், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். பின்னர் அரசு சார்பில் தலா ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கினர்.

விபத்து நடந்த இடத்தில் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர்கணேஷ் தலைமையில் திருமானூர், கீழப்பழுவூர், அரியலூரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு கூடியிருந்த பொதுமக்களை கலைந்துபோக செய்ததுடன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உரிமையாளர் தலைமறைவு

வெடிவிபத்தை அறிந்த பட்டாசு ஆலை உரிமையாளர் ராஜேந்திரனும், அவரது மருமகன் அருண்குமாரும் தலைமறைவாகினர். அவர்களை தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த விபத்தில் ஆலையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 10 இருசக்கர வாகனங்கள், ஒரு டிராக்டர், ஒரு வேன் ஆகியவை தீயில் எரிந்து நாசமாயின என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கர விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story