திருச்சி அருகே கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா


திருச்சி அருகே கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா
x

திருச்சி அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்பிடித்தனர்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் ஆலத்துடையான்பட்டி ஊராட்சி வடக்கு பகுதியில் 218.86 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய ஏரியும், அதனையொட்டி 162.52 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சின்ன ஏரியும் இரட்டை ஏரிகளாகும்.

மங்கியாயி அம்மன் கோயிலுக்கு செல்லும் பாதையே இரண்டு ஏரிகளையும் பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளது. கொல்லிமலை அடிவார புளியஞ்சோலையிலிருந்து வரும் அய்யாற்றை நீராதாரமாக கொண்ட இந்த ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து தடைபட்டதால், ஏரியின் நீர்மட்டம் மிகவும் குறைந்தது.

கடந்த இரண்டு வருடங்களாக மீன்பிடி தடைபட்டதால், இன்று காலை மீன்பிடி திருவிழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அறிவிப்பையொட்டி சுற்று வட்டாரத்திலுள்ள ஊர்களிலிருந்து அதிகாலை முதல் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரளாக வந்தனர்.

காலை 7.30 மணியளவில் மீன்பிடிக்க அனுமதித்ததன் பேரில், மீன்பிடி வலைகள், சாக்குப்பைகள் போன்ற உபகரணங்களுடன் உற்சாகமாய் கோஷமெழுப்பியபடி ஏரியில் இறங்கி மீன் பிடிக்க தொடங்கிய பொதுமக்கள் கைகளில் பெரிய அளவிலான மீன்கள் அகப்பட்டதால் , மகிழ்ச்சியடைந்தனர்.

பிடிபட்ட மீன்களை சாக்குகளிலும், கூடைகளிலும் தூக்கிச் சென்றனர். சுமார் 10 கிலோ எடை கொண்ட மீன்களை தூக்கிச் சென்ற செய்தி பரவியதையடுத்து அக்கம் பக்கத்திலுள்ள கிராம மக்கள் திரளாக வந்ததையடுத்து, மீன்பிடி திருவிழா கோலாகலமாக காணப்பட்டது.


Next Story