ராமேசுவரத்தில் புத்தர் சிலைகளுடன் கரை ஒதுங்கிய வெளிநாட்டு தெப்பம்


ராமேசுவரத்தில் புத்தர் சிலைகளுடன் கரை ஒதுங்கிய வெளிநாட்டு தெப்பம்
x

ராமேசுவரம் ஓலைகுடா கடற்கரையில் கரை ஒதுங்கி உள்ள இந்த தெப்பம் மியான்மர் நாட்டை சேர்ந்த தெப்பமாக இருக்கலாம் என்று கடலோர போலீஸ் அதிகாரி கூறினார்.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ஓலைகுடா கடற்கரையில், தேர் போன்று செய்த தெப்பம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து, கடலோர போலீசார் அங்கு சென்று கரை ஒதுங்கி கிடந்த தெப்பத்தை பார்வையிட்டனர். அது மூங்கில் கம்புகளால் செய்யப்பட்ட தெப்பம் ஆகும். உள்ளே புத்தர் சிலைகளும், பூஜை பொருட்கள் சிலவும் இருந்தன.

இது போன்ற தேர்வடிவிலான தெப்பத்தை மியான்மர் போன்ற நாடுகளில் உள்ள மக்கள் கடலில் மிதக்க விட்டு வழிபாடு செய்வார்கள். அவ்வாறு மிதக்க விடப்பட்ட புத்தர் சிலைகளுடன் கூடிய தெப்பம் கடல் அலை மற்றும் நீரோட்டம், காற்றின் வேகத்தால் இந்திய கடல் எல்லைக்குள் வந்து, ராமேசுவரத்தில் கரை ஒதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து கடலோர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "மியான்மர் நாட்டில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நிலவு திருவிழா கொண்டாடப்படும். இதையொட்டி தெப்பத்தை செய்து அதில் சிலைகளை வைத்து மக்கள் வழிபாடு நடத்தி திருவிழா முடிந்த பின்னர் தெப்பத்தை கடலில் மிதக்கவிட்டு விடுவார்கள். ராமேசுவரம் ஓலைகுடா கடற்கரையில் கரை ஒதுங்கி உள்ள இந்த தெப்பம் மியான்மர் நாட்டை சேர்ந்த தெப்பமாக இருக்கலாம். அதில் மண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான 3 புத்தர் சிலைகள் இருந்தன. இதே போன்ற ஒரு தெப்பம் 3 நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினம் பகுதியிலும் கரை ஒதுங்கியது", என்றார்.


Next Story