தஞ்சையில் பராமரிப்பின்றி கிடந்த பூங்கா சீரமைக்கப்பட்டது


தஞ்சையில் பராமரிப்பின்றி கிடந்த பூங்கா சீரமைக்கப்பட்டது
x
தினத்தந்தி 13 Jun 2023 9:50 PM GMT (Updated: 14 Jun 2023 10:09 AM GMT)

தஞ்சை சீனிவாசபுரம் பகுதியில் பராமரிப்பின்றி கிடந்த பூங்கா "தினத்தந்தி" செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சை சீனிவாசபுரம் பகுதியில் பராமரிப்பின்றி கிடந்த பூங்கா "தினத்தந்தி" செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.

பூங்கா

தஞ்சை சீனிவாசபுரம் பகுதியில் ராஜன் ரோடு முதல் பிரிவு சாலையோரத்தில் சிறிய அளவிலான பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா செயற்கை நீறுற்று, நடைபாதை, இருக்கைகள், மின்விளக்குகள் பொருத்தப்பட்டு அழகாக காட்சி அளித்து வந்தது. இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பூங்காவில் அமர்ந்து இளைப்பாறி சென்று வந்தனர். பூங்காவின் எதிரே தொடக்கப்பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகளும் பூங்காவை பயன்படுத்தி வந்தனர்.

மதுப்பிரியர்களின் கூடாரம்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பூங்கா முறையாக பராமரிப்பின்றி காணப்பட்டது. இதனால் பூங்காக்குள் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளித்தது. இதனை பயன்படுத்திக்கொண்டு இரவு நேரங்களில் பூங்கா மதுப்பிரியர்களின் கூடாரமாக செயல்பட்டு வந்தது.

இதுகுறித்து "தினத்தந்தி"யில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று சம்பந்தப்பட்ட மாநகராட்சிஅதிகாரிகள் பூங்காவை பார்வையிட்டனர். பின்னர் ஊழியர்களை கொண்டு பூங்காவில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை வெட்டி அகற்றி சீரமைத்தனர்.

சுத்தம் செய்யப்பட்டது

பூங்காவுக்குள் கிடந்த மதுப்பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்களை அகற்றி சுத்தம் செய்தனர். மேலும், விரைவில் பூங்கா முழுமையாக சீரமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.


Next Story