கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை அமைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை அமைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

தஞ்சாவூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அமைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தஞ்சாவூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அரசு அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டத்தின் முதன்மை நகரங்களில் ஒன்றான கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு, கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது அந்த பகுதிகளில் வாழும் மக்களின் முக்கியக் கோரிக்கையாகும். மாவட்டத் தலைநகரமாக அறிவிக்கப்படுவதற்கான அனைத்துத் தகுதிகளும், வசதிகளும் கும்பகோணம் நகருக்கு உண்டு.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 21 மாநகராட்சிகள் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மாநகராட்சி மட்டுமே உள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் தான் தஞ்சாவூர், கும்பகோணம் என இரு மாநகராட்சிகள் உள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளும் மாவட்டத் தலைநகரமாகவோ அல்லது மாவட்டத்தின் ஒற்றை மாநகராட்சியாகவோ திகழும் நிலையில், கும்பகோணம் மாநகராட்சிக்கு மட்டும் இவற்றில் எந்த பெருமையும் இல்லை. மாவட்டத் தலைநகரமாக திகழும் மாநகராட்சி என்ற பெருமையை கும்பகோணத்திற்கு வழங்க வேண்டும் என்பது தான் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை 25 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தாங்கள், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப் படும் என்று வாக்குறுதி அளித்திருந்தீர்கள். அதை நிறைவேற்றுவதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது.

தமிழ்நாட்டில் கும்பகோணம் மட்டுமின்றி, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், சேலம், கோவை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் கும்பகோணம் உள்ளிட்ட புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் போது மாவட்ட நிர்வாகம் மேம்படும், உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அரசு அமைக்க வேண்டும்.

அதேபோல், தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டங்களையும் பிரித்து, 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், அதில் கும்பகோணம் உள்ளிட்ட புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படுவதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story