கோயம்பேடு பஸ் நிலையத்தில் வாலிபரிடம் வழிப்பறி செய்த போலீஸ்காரர்


கோயம்பேடு பஸ் நிலையத்தில் வாலிபரிடம் வழிப்பறி செய்த போலீஸ்காரர்
x

கோயம்பேடு பஸ் நிலையத்தில் வடமாநில வாலிபரிடம் வழிப்பறி செய்த ஆயுதப்படை போலீஸ்காரர் தனது உறவினருடன் கைது செய்யப்பட்டார்.

சென்னை

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் வடமாநில வாலிபர் ஒருவரின், சட்டை பையில் இருந்த பணத்தை மர்மநபர்கள் 2 பேர் பறிக்க முயன்றனர். அந்த வாலிபர், பணத்தை பறிக்க விடாமல் 2 பேரிடமும் போராடிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த கோயம்பேடு போலீசார், வாலிபரிடம் பணம் பறிக்க முயன்ற இருவரையும் மடக்கிப்பிடிக்க முயற்சி செய்தனர். போலீசாரை கண்டதும் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்ல முயன்றனர்.

ஆனால் போலீசார் விடாமல் விரட்டிச்சென்று இருவரையும் மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

விசாரணையில் பிடிபட்ட இருவரும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 26) மற்றும் அவரது உறவினர் விஷ்ணு (27) என்பதும், இவர்களில் சதீஷ்குமார், சென்னை சூளைமேட்டில் தங்கி, சென்னை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருவதும் தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் இருவரும் குடிபோதையில் வடமாநில வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு போலீசார், ஆயுதப்படை போலீஸ்காரர் சதீஷ்குமார் மற்றும் விஷ்ணு ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story